இந்தியர்கள் அதிகளவில் வியாபாரம் செய்து வந்த துபாயின் பிரதான சந்தையில் நடந்த பெரும் தீ விபத்தில் 183 கடைகள் எரிந்தன.
துபாயில் உள்ள நைய்ப் சந்தையில் நேற்று காலை நடந்த இந்த தீ விபத்தில் துணிகள், பொம்மைகள் உட்பட பெரும்பாலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின. இந்திய தூதரக அதிகாரிகள் வேணு ராஜமோனி, பி.எஸ்.முபாரக் ஆகியோர் தீ விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.
இந்த விபத்தில் காயமடைந்த இரண்டு தீயணைப்பு படையினர் உட்பட 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியா, பாகிஸ்தான் நாட்டினரின் பெரும்பாலான கடைகளே இதில் அழிந்தன.
இந்திய தொழிலாளர் சாதிக் கூறுகையில், "கடந்த 30 ஆண்டுகளாக இந்த சந்தையில் நாங்கள் வியாபாரம் செய்து வருகிறோம். இந்த விபத்தில் நாங்கள் அனைத்தையும் தொலைத்து விட்டோம். மீண்டும் நாங்கள் தொழில் துவங்க நீண்ட காலமாகும். சந்தை முழுவதும் எரிந்துள்ள இந்த நிலையை காணவே கொடூரமாக உள்ளது" என்றார்.