துபாயில் வன்முறை: 625 அயல்நாட்டு தொழிலாளர்கள் கைது!

வியாழன், 3 ஏப்ரல் 2008 (18:45 IST)
துபாயில் வன்முறையில் ஈடுபட்ட இந்தியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட அயல்நாட்டு தொழிலாளர்களை சார்ஜா காவல்துறையினர் கைது செய்தனர்.

துபாய்-சார்ஜா நெடுஞ்சாலையின் அல் நஹ்டா பகுதி குடியிருப்பு வாசிகள், வாகன ஓட்டிகள் ஆகியோரிடம் வன்முறை நிகழ்வுகளை அரங்கேற்றி உள்ளனர். மொத்தம் 800 தொழிலாளர்கள் நேற்று முன்தினம் (1ஆம் தேதி) இரவு முதல் நேற்று காலை வரை தாக்குதல்களை தொடர்ந்துள்ளனர்.

உடமைகள் அழிப்பு, போக்குவரத்துக்கு இடையூறு, மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஆகிய காரணங்களுக்காக 625 தொழிலாளர்களை சார்ஜா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள்.

டைகர் ஒப்பந்த நிறுவனத்தில் பணிபுரியும் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். நிறுவனத்தின் முகாம் அதிகாரி தொழிலாளர்களை இரண்டு கட்டுமானப் பணிகள் நடந்து வரும் கட்டிடங்களில் தங்க உத்தரவிட்டுள்ளதை அடுத்து, இந்த வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று காவல்துறையினர் அந்நாட்டு பத்திரிக்கை ஒன்றிடம் தெரிவித்துள்ளனர்.

கைதின்போது, காயமடைந்த 15 தொழிலாளர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர துபாய், அபுதாபி, சிறப்பு பாதுகாப்பு படை ஆகியவற்றின் உதவியை காவல்துறையினர் நாடியுள்ளனர்.

"எந்தவித காரணமும் இல்லாமல் நடத்தப்பட்ட இந்த வன்முறை நிகழ்வு நாட்டின் பாதுகாப்பை பாதித்துள்ளது" என்று சார்ஜா காவல்துறை இயக்குனர் ஹூமய்த் அல் ஜூதாதி தெரிவித்தார்.

அயல் நாடு வாழ் இந்திய தொழிலாளர்களின் அடிப்படை ஊதியத்தை நிர்ணயிக்க இந்திய அரசு முயற்சித்து வரும் நிலையில், அரபு நாடுகளில் அதிகளவில் போராட்டங்களும், வன்முறைகளும் நடந்து வருகின்றன. அதில் பெரும்பாலான தொழிலாளர்கள் குறைவான ஊதியம், தங்கும் வசதி ஆகிய காரணங்களுக்காக போராடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்