பாகிஸ்தான் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த இந்திய மீனவர் ஒருவர் மர்மான முறையில் இறந்துள்ளார்.
இது குறித்து உயர்மட்ட அளவிலான விசாரணை நடத்த பாகிஸ்தான் மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தான் சிறையில் இருந்த 431 இந்திய மீனவர்களில் லட்சுமணன் (40) என்பவர் கராச்சியில் உள்ள மாலிர் மாவட்ட சிறைச்சாலை மருத்துவமனையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மனித உரிமை ஆணையம், நடுநிலையான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் அரசை வலியுறுத்தியுள்ளது.
"லட்சுமணன் இறந்தது குறித்து உயர்மட்ட அளவிலான விசாரணை நடத்த வேண்டும். இதுபோன்ற நிகழ்வு எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க பாகிஸ்தான் அரசு உரிய முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஆணையத்தின் துணைத் தலைவர் சோக்ரா யூசுப் கூறினார்.
மேலும், இந்த நிகழ்வு மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கவும், இந்திய உயர்மட்ட ஆணையத்திடம் மீனவரது உடலை ஒப்படைக்க உரிய முயற்சிகளை மேற்கொள்ளவும் பாகிஸ்தான் அரசை மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.