தலாய் லாமாவுடன் சீனா பேச வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்!
வியாழன், 27 மார்ச் 2008 (14:30 IST)
திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமாவுடன் சீனா பேச்சு நடத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வலியுறுத்தியுள்ளார்.
சீன அரசை எதிர்த்து திபெத்தில் நடந்துவரும் போராட்டங்கள் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், உயிரிழப்புகள் பற்றிய விவரங்களைச் சேகரிக்கச் செல்லும் அயல்நாட்டுப் பத்திரிகையாளர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் பதற்றத்தின் இடையில் பல்வேறு மர்மங்களும் நீடிக்கின்றன.
இந்நிலையில், சீன அதிபர் ஹூ ஜிந்தாவோவுடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், திபெத்தில் நிலவும் பதற்றமான சூழல் குறித்துக் கவலை தெரிவித்ததுடன், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் திபெத்தில் நுழைய விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
"தலாய் லாமாவுடனும் அவரது பிரதிநிதிகளுடனும் சீன அரசு ஏற்கெனவே நடத்தி வந்த பேச்சு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
திபெத்தில் தற்போது நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு அப்பேச்சை மீண்டும் துவங்க வேண்டும் என்று அதிபர் புஷ் வலியுறுத்தினார்" என்று அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஸ்டீஃபன் ஹாட்லே கூறினார்.
"தலாய் லாவுடன் பேச்சு நடத்தத் தாங்கள் தயாராக இருப்பதாக சீன அரசு கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், அதற்குப் பிறகும் திபெத்தில் வன்முறைகளும் அதனால் ஏற்படும் குற்றங்களும் அதிகரித்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் கவலை தருகின்றன.
மேலும், வன்முறைகளைத் தான் விரும்பவில்லை என்று தலாய் லாமா கூறியிருக்கும் நிலையில், அவருடன் பேச்சு நடத்துவதுதான் சரியான தீர்வாக இருக்கும்" என்றார் அவர்.