சிறைக் கைதிகளை விடுதலை செய்ய பேச்சு: பாக். ராணுவம்!
புதன், 26 மார்ச் 2008 (16:29 IST)
இந்திய, பாகிஸ்தான் சிறைகளில் வாடும் கைதிகளை விடுதலை செய்வது குறித்து உயர்மட்ட அளவில் பேச்சு நடந்து வருவதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
சண்டிகரில் நடக்கும் இருநாட்டு எல்லை பாதுகாப்பு படையினர் கூட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி முகமது ஹாரூன் அஸ்லாம் தலைமையில் 14 வனச்சரகள் பங்கேற்றுள்ளனர். அப்போது, "கடந்த 1965ம் ஆண்டு போர், 1971ஆம் ஆண்டு மோதலில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுவிப்பது குறித்து இருநாட்டு அயலுறவு அமைச்சர்கள் அளவில் பேச்சு நடந்து வருகிறது. உயர்மட்ட அளவில் நடந்துவரும் இந்த பேச்சில் கைதிகள் விடுதலை செய்யப்பட போதிய வாய்ப்பு உள்ளது" என்று அவர் கூறினார்.
பாகிஸ்தானில் புதிய அரசு பொறுப்பேற்ற உடன் நடக்கும் முதல் எல்லைப் பாதுகாப்பு படையினரின் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இருநாட்டு எல்லையில் போதைப்பொருள் கடத்தல் சம்பவம் குறித்து அஸ்லாம் கூறுகையில், "பாகிஸ்தானில் இருந்து அவை கொண்டுவரப்பட வாய்ப்பில்லை. எனினும், இந்த மூன்று நாள் கூட்டத்தில் எல்லைப் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்படும். ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா, பாகிஸ்தானுக்கு போதைப்பொருள் வருவதாக கூறப்படுவது வெறும் புரளி. கடத்தல் சம்பவங்களை முற்றுலுமாக தடுப்பது குறித்து மிக விளக்கமாக விவாதிக்கப்படும்" என்று தெரிவித்தார்.