பாகிஸ்தானிற்கு 30 கோடி டாலர் உதவி: அமெரிக்கா வழங்குகிறது!
புதன், 26 மார்ச் 2008 (16:12 IST)
பயங்கரவாதத்திற்கு எதிரான போரைத் தொடர ராணுவ உதவியாக 30 கோடி டாலரை பாகிஸ்தானிற்கு உதவியாக அமெரிக்கா வழங்க உள்ளது.
பாகிஸ்தான் விவகாரம் தொடர்பாக வாஷிங்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கார்டன் ஜோன்ட்ரூ, பாகிஸ்தானிற்கான பாதுகாப்பு உதவியாக 30 கோடி டாலரை ஒதுக்குமாறு நாடாளுமன்றத்தை அதிபர் புஷ் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் புதிய அரசு பதவியேற்றாலும் கூட அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றி அமெரிக்கா இன்னும் கவலை கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
அணு ஆயுதப் பரவல் தடை, பயிற்சி, சட்ட அமலாக்கம், சர்வதேச போதைப் பொருள் கட்டுப்பாடு, பயங்கரவாத எதிர்ப்புப் போர் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்காக கடந்த 7 ஆண்டுகளில் 774 கோடி டாலர்களை பாகிஸ்தானிற்கு உதவியாக அமெரிக்கா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர, பாகிஸ்தானிற்கு பொருளாதார உதவியாக 453 கோடி டாலரை அமெரிக்கா வழங்கியுள்ளது.