மலேசியாவில் போதிய இந்திய அதிகாரிகளை நியமிக்க வலியுறுத்தல்!

திங்கள், 24 மார்ச் 2008 (13:38 IST)
மலேசிய சமூக பாதுகாப்பு அமைப்பில் போதிய இந்திய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசை மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இந்தியர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், அவர்களது உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கும் இந்திய அதிகாரிகள் அதிகளவில் நியமிக்கப்பட வேண்டும் என்று மலேசிய மனித உரிமை ஆணையர் என்.சிவசுப்ரமணியம் அந்நாட்டில் வெளியாகும் தமிழ் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், 'பணிகள் சம்பந்தமான விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கும் இந்தியர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்திய அதிகாரிகளால் தொழிற்சாலை விபத்து உட்பட பல்வேறு நிகழ்வுகளில் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உரிய உதவிகள், ஆலோசனைகள் வழங்கவும், அவர்களுக்குரிய சலுகைகளை சரியான முறையில் காலதாமதமின்றி பெற்றுத்தரவும் முடியும்' என்று கூறியுள்ளார்.

மலேசியாவின் சமூக பாதுகாப்பு அமைப்பில் தற்போதுள்ள நான்கு அதிகாரிகள் என்ற எண்ணிக்கையை மேலும் உயர்த்த அந்நாட்டு மனித வள அமைச்சர் எஸ். சுப்ரமணியனை மனித உரிமை ஆணையம் வலியுறுத்தி உள்ளது.

தொழிலாளர்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கைகளை அதிகரிக்க மனிதவள அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட மத்திய பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்