குடியேற்ற விதிமுறை: இந்தியர்கள் ஒத்துழைக்க வேண்டும் - பிரிட்டன்!
வெள்ளி, 14 மார்ச் 2008 (19:58 IST)
பிரிட்டனில் 4 லட்சம் பேர் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாகவும், அப்படிப்பட்டவர்களை கண்டறிந்து வெளியேற்றவே புதிய குடியேற்ற விதிமுறைகள் நடைமுறைப்படுத்த படுவதாகவும், அதற்கு இந்தியர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரிட்டன் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
லட்சக்கணக்கான வழக்குகள் பதிந்து நடவடிக்கை எடுக்க தாமதம் ஆகும் என்றபோதிலும், ஒவ்வொரு வழக்காக தீர்வுகாணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் குடியேற்றத்துறை அமைச்சர் லியாம் பய்ர்னே, 'தற்சமயம் ஆயிரம் தொழிலாளர்கள் மீது வழக்கு தொடர ஆலோசிக்கப்பட்டு வருகிறது' என்று கூறியுள்ளார்.
பிரிட்டனில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க கொண்டுவரப்பட்டுள்ள 'புள்ளிகள் அடிப்படையிலான குடியேற்ற முறை' (Point-based Immigration System) யின்படி, பிரிவு 1- பிரிட்டனில் குடியேறுவதற்கு மிக உயர்ந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பிரிவு 2- திறமையான தொழிலாளர்களை இலக்காக கொண்டுள்ளது. அவர்களுக்கு உரிய பணிநியமன கடிதமும் தேவை. பிரிவு 5- இசைக் கலைஞர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற தற்காலிக தொழிலாளர்கள் இந்த பிரிவின்கீழ் வருகின்றனர். பிரிவு 4- மாணவர்களுக்கானது; 2009-ம் ஆண்டு முதல் பின்பற்றப்படுகிறது. பிரிவு 3-ல் இதுவரை எந்தவிதமான திட்டமும் அறிமுகப்படுத்தப்படவில்லை.
கல்வித்தகுதி, முன்பு பெற்ற வருமானம், ஆங்கில மொழிப்புலமை, வயது, பணி முன் அனுபவம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இதற்கான புள்ளிகள் கணக்கிடப்படுகிறது.
75 + 10 +10 புள்ளிகள் இருப்பவர்கள் மட்டுமே பிரிவு 1-ன்கீழ் தகுதி பெற முடியும். அதன்படி, கல்வி தகுதியில் 75 புள்ளிகளும், முன்பு பெற்ற வருமானத்தில் 10 புள்ளிகளும், ஆங்கில மொழிப்புலமை, வயது, பணி முன் அனுபவம் ஆகியவற்றில் அடுத்த 10 புள்ளிகளும் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு பிரிவுக்கும் குறிப்பிட்ட புள்ளிகள் பிர்ட்டன் அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரிவுகளுக்கு உரிய புள்ளிகளை பெற்றிருந்தால் மட்டுமே பிரிட்டனில் குடியேற அனுமதிக்கப்படும்.
புள்ளிகள் அடிப்படையிலான குடியேற்ற முறையில் மொழிப்புலமையும் பரிசோதிக்கப்படுவதால், பிரிட்டனில் அதிகளவில் உள்ள இந்திய உணவு விடுதிகளுக்கு பணியாளர்களை அழைத்து வருவதில் சிக்கல் ஏற்படும். இதுபோன்று சாதாரண திறமையுள்ள தொழிலாளர்களுக்கு பிரிட்டனில் பற்றாக்குறை ஏற்படும்.
பூர்வாங்கப் படிவம் வெளியிட முடிவு:
'பயன்பாட்டில் உள்ள விசா முறைகளில் மாற்றங்கள் தேவைப்படுகின்றன. தற்போதுள்ள முறைப்படி, 80 வழிகளில் அயல்நாட்டினர் பிரிட்டனுக்கு வரமுடியும்.அதனால்தான், புதிய புள்ளிகள் அடிப்படையிலான குடியேற்ற முறையை சரியானதாகவும், உறுதியானதாகவுமாக மாற்ற விரும்புகிறோம். அதற்கு இந்திய, சீன நாட்டினரிடமிருந்து போதிய ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்' என்று அமைச்சர் மேலும் கூறினார்.
இந்த புதிய முறை ஐரோப்பியர்கள் அல்லாத அயல்நாட்டினரை பிரிட்டனுக்குள் அனுமதிக்கிறது. இதுகுறித்த சந்தேகங்களைப் போக்கவும் இன்னும் ஒரு மாதத்தில் பூர்வாங்கப் படிவம் (blueprint ) வெளியிட பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது. அதில் குடியேற்ற ஆலோசனைக் குழு, தனிக்குழு ஆகியவை பணியாளர்களுக்கான பற்றாக்குறை குறித்த பட்டியலை வெளியிடுகிறது.