அடிப்படை மாத ஊதியமாக ரூ.7 ஆயிரம் தர நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து, பஹ்ரைனில் ஆயிரம் அயல்நாட்டு தொழிலாளர்களின் 5 நாட்கள் வேலை நிறுத்தப்போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
பஹ்ரைனில் உள்ள ஹாஜி ஹாசன் அல் அலி நிறுவனத்தின் இரண்டு தொழிலாளர் முகாம்களில் ஆயிரக்கணக்கான அயல்நாட்டு தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் கடந்த 8ஆம் தேதி ஊதிய உயர்வு, இதர சலுகைகள், போதிய தங்கும் வசதி ஆகியவற்றை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்கினர்.
இந்தியர்கள் பெரும்பான்மையுடன், ஆயிரம் அயல்நாட்டு தொழிலாளர்களில் பங்கேற்ற இப்போராட்டம் கடந்த 5 நாட்கள் நீடித்து வந்தது. அந்நாட்டு தொழிலாளர் நல அமைச்சகம் தலையிட்டு குறைந்தபட்ச மாத ஊதியத்தை ரூ.7 ஆயிரமாக நிர்ணயிக்க உத்தரவிட்டது. அதனையடுத்து, போராட்டத்தை நிறுத்திக்கொண்டு தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பினர்.
இந்திய அரசு பஹ்ரைனில் உள்ள இந்திய தொழிலாளர்களின் அடிப்படை ஊதியத்தை ரூ. 10,400 (100 தினார்) ஆக உயர்த்த அந்நாட்டு அரசுடன் அடுத்தமாதம் ஒப்பந்தமிருந்த நிலையில், தொழிலாளர்கள் குறைந்தபட்ச மாத ஊதியத்தை ரூ.7 ஆயிரத்துக்கு ஒப்புக்கொண்டு பணிக்கு திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.