மருத்துவர் ஹனீப் வழக்கை விசாரிக்க ஆஸ்ட்ரேலிய நீதிபதி இந்தியா வருகை!
வியாழன், 13 மார்ச் 2008 (16:38 IST)
தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளதாக கூறப்பட்ட இந்திய மருத்துவர் முகமது ஹனீப் மீதான வழக்கை விசாரிக்க ஆஸ்ட்ரேலிய அரசு ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்துள்ளது. விசாரணை நடத்த அவர் இந்தியா வர உள்ளார்.
கடந்த செப்டம்பரில் லண்டன், கிளாஸ்கோவ் ஆகிய பகுதிகளில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்புள்ளதாக கூறப்பட்ட ஹனீப் 25 நாட்கள் சிறையில் வைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக இந்திய மருத்துவர் ஹனீப் விசாரணை செய்யப்பட்ட முறைக்கு பொதுமக்கள், மனித உரிமை குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து, 'இந்த வழக்கை அதிகாரிகள் எந்த அளவுக்கு நடத்தியுள்ளனர்' என்பது குறித்து மறுஆய்வு செய்யப்பட உள்ளது.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கெவின் ஆன்ரூஸ் உட்பட தேவையான சாட்சிகளை விசாரிக்க அனுமதி கோரப்பட்டால், அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்று ஆஸ்ட்ரேலிய அரசு தெரிவித்துள்ளதை வழக்கறிஞர் ராபர்ட் மிக்கிலிலேன்ட் உறுதிப்படுத்தியுள்ளார். 'இது இந்திய மருத்துவர் மீதான விசாரணையின் ஒரு பகுதியாக மட்டுமே இருக்கும்' என்றும் அவர் கூறினார்.
'பிரிட்டனில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களை மருத்துவர் ஹனீப் நன்கு அறிவார் என்பதால், ஆஸ்ட்ரேலியாவில் தங்கவும், பணிபுரியவும் விசா மறுக்கப்பட்டது' என்று ஆன்ரூஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மருத்துவர் ஹனீப் வழக்கை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஜான் கிளார்க்கை ஆஸ்ட்ரேலிய அரசு நியமித்துள்ளது. இதற்காக கிளார்க் இந்தியாவுக்கு வர ஆயத்தமாகி வருகிறார். இந்தியா வரும் கிளார்க்கிற்கு போதிய உதவிகளை ஆஸ்ட்ரேலிய அரசு வழங்கியுள்ளது.