சிவநேசன் உடலுக்குப் பிரபாகரன் அஞ்சலி: சிறிலங்கா வதந்தி அம்பலம்!
ஞாயிறு, 9 மார்ச் 2008 (17:34 IST)
இலங்கையில் சிறிலங்க படையினரின் கண்ணிவெடிக்குப் பலியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசனின் உடலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தலைவர் வே.பிரபாகரன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இதன்மூலம், விமானப்படை குண்டுவீச்சில் பிரபாகரன் படுகாயம் அடைந்துவிட்டார் என்று சிறிலங்க அரசால் பரப்பப்பட்ட செய்தி அப்பட்டமான வதந்தி என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் சிறிலங்காப் படையினரின் கண்ணிவெடிக்குப் பலியானார். அவரது உடல் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். மலர் மாலை வைத்து வணங்கிவிட்டுக் குத்து விளக்கையும் ஏற்றி வைத்தார்.
அவருடன் அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன், உளவுத் துறைத் தலைவர் பொட்டு அம்மன், நிதித்துறை பொறுப்பாளர் தமிழேந்தி ஆகியோரும் வந்து அஞ்சலி செலுத்தினர்.
விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன் பலியான சில தினங்களில், சிறிலங்க விமானப்படை நடத்திய குண்டு வீச்சில் பிரபாகரன் படுகாயம் அடைந்ததாக சிறிலங்க அரசு செய்திகளைப் பரப்பியது.
இந்நிலையில், சிவநேசனின் உடலுக்கு பிரபாகரன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதன் மூலம் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.