சட்ட விரோதமாக மருந்துகளுக்கு விலை நிர்ணயம் செய்த கோல்டுஷீல்டு மருந்து நிறுவனம் ஒரு மில்லியன் பவுண்டு தொகையை அபராதமாக செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது.
வார்ஃபெரின் என்ற ரத்தசுருக்கு மருந்தின் விலையை நிர்ணயம் செய்ததற்காக இந்த மருத்துவ நிறுவனத்தின் தலைவரான குஜராத்தை சேர்ந்த அஜித் பட்டேல் கடந்த 2005 ஜனவரி முதல் தீவிர கண்காணிப்பின்கீழ் உள்ளார்.
வார்ஃபெரின், பெனிசிலினை அடிப்படையாக கொண்ட நோய் எதிர்ப்பு மருந்தை கடந்த 1996-ம் ஆண்டு முதல் டிசம்பர் 2000-ம் ஆண்டு வரை தேசிய சுகாதார மையத்திற்கு விநியோகித்தற்காக தீவிர குற்றப்பிரிவு அலுவலகம் (எஸ்.எப்.ஓ.,) தனது விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதுதொடர்பாக, 2002-ம் ஆண்டில் ஆறு மருந்து நிறுவனங்கள் சோதனையிடப்பட்டன.
ஏப்ரல் 2002-ல் எஸ்.எப்.ஓ.,வின் 200 அலுவலர்கள் அஜித் பட்டேலின் வீடு உட்பட 11 பேரின் வீடுகளையும், கோல்டுஷீல்டு நிறுவனம் உட்பட 16 அலுவலகங்களையும் சோதனையிட்டு, முக்கிய ஆவணங்கள், கணினி உபகரணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும், 'கோல்டுஷீல்டு' மருந்து நிறுவனத்திற்கு 5 மில்லியன் பவுண்டு அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், கோல்டுஷீல்டு நிறுவனம் வடக்கு அயர்லாந்தின் சுகாதார மற்றும் சமுக சேவைத்துறைக்கு 2,50,000 பவுண்டுகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த 4-ம் தேதி ஏற்கனவே ஸ்காட்லாந்து அதிகாரிகளிடம் 7,50,000 பவுண்டுகளை அபராதமாக இந்நிறுவனம் வழங்கியுள்ளது.
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு 4 மில்லியன் பவுண்டுகளை தேசிய சுகாதார மையத்திற்கு வழங்கியுள்ள நிலையில், அதன் இறுதி தொகைதான் இவை என்பது குறிப்பிடத்தக்கது.