ஆஃப்கன் போதைப் பொருள் கடத்தல்: ஐ.நா. கவலை!
வியாழன், 6 மார்ச் 2008 (14:41 IST)
போதைப் பொருள் கடத்தலைத் தடுப்பதற்கு ஆஃப்கானிஸ்தான் அரசு இன்னும் அதிகமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.
கொடிய போதைப் பொருட்களான ஓபியம், ஹெராயின் உற்பத்தியில் உலகிலேயே முதலிடத்தில் ஆஃப்கானிஸ்தான் உள்ளது.
அந்நாட்டில் இருந்து அயல் நாடுகளுக்குக் கடத்தப்படும் போதைப் பொருட்களின் அளவு கவலை தரக்கூடிய வகையில் அதிகரித்துள்ளது. போதைப் பொருள் கடத்தல் கும்பல்களின் தகவல் தொடர்பும் நவீனமாகியுள்ளது.
கடத்தல் கும்பல்களுக்கு ஆஃப்கன் அரசு அதிகாரிகள், அந்நாட்டிற்கு வெளியில் உள்ள மாஃபியா கும்பல்களின் தொடர்பு அதிகரித்துள்ளதுதான் இதற்குக் காரணம் என்று ஐ.நா. போதைப் பொருள், குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரி கிறிஸ்டினா கைனா ஓகுஸ் கூறினார்.
சட்டவிரோத ஓபியச் சந்தையை அழிப்பதற்கும், அதனால் ஆண்டிற்கு 300 கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு லாபம் பெறும் போதை வணிகர்களை ஒடுக்குவதற்கும் தேவையான நடவடிக்கைகளை ஆஃப்கன் அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
போதைப் பொருள் வணிகத்தில் தொடர்புடைய ஒவ்வொருவரையும் கண்டறிந்து அவர்களின் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க ஆஃப்கன் அரசு முன்வர வேண்டும் என்று ஓகுஸ் வலியுறுத்தினார்.
சர்வதேச போதைப் பொருட்கள் தடுப்பு வாரியத்தின் அறிக்கையில் ஆஃப்கானிஸ்தான் மீது கூறப்பட்டுள்ள குறைவான மதிப்பீடுகளைச் சுட்டிக்காட்டி ஓகுஸ், சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் குற்றங்களையும் முறைகேடுகளையும் அதனால் விளையும் பாதுகாப்பின்மையையும் தடுக்க முடியாது என்று கூறினார்.