நகரங்களின் மக்கள் தொகை வேகமாக அதிகரிக்கும்: ஐ.நா. ஆய்வு!
புதன், 27 பிப்ரவரி 2008 (16:10 IST)
மனிதகுல வரலாற்றில் முதல் முறையாக இந்தாண்டு இறுதிக்குள் உலக மொத்த மக்கள் தொகையில் பாதிப்பேர் நகர்ப் புறங்களில் வசிப்பார்கள் என்று ஐ.நா.வின் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியாவைப் பொருத்தவரை, இந்த அளவு 29 விழுக்காடாக மட்டுமே இருக்கும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
இது குறித்து ஐ.நா.வின் பொருளாதார, சமூக மேம்பாட்டுத் துறை இயக்குநர் ஹனியா ஜிலோட்நிக் கூறுகையில், "நகரமயமாதலில் இந்தியா பின்தங்கி இருந்தாலும், நகரப் பகுதிகளுக்கு குடிபெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
கிராமப்புற மேம்பாடு, வேளாண்மைத் துறை வளர்ச்சி ஆகியவற்றினால் பலர் தொடர்ந்து விவசாயத்திலேயே நீடிப்பர். பண்ணைத் தொழில் அல்லாத தொழிலாளர்கள் நகரங்களுக்கு இடம்பெயர்வர்" என்றார்.
இந்த வேகமான இடம்பெயர்வினால் கவலைப்படத் தேவையில்லை என்றும், நகரமயமாதலால் பொருளாதார வளர்ச்சியும் உயர்ந்த சமுதாயமும் தான் உருவாகும் என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
சீனாவில் 40 விழுக்காட்டினர் நகரப் பகுதிகளில் வசிக்கின்றனர். இந்த எண்ணிக்கை 2050-ம் ஆண்டில் 70 விழுக்காடாக அதிகரிக்கும்.