இனப்பிரச்சனைக்கு ஒற்றையாட்சியின் கீழ்தான் தீர்வு : மகிந்த ராஜபக்ச!
திங்கள், 4 பிப்ரவரி 2008 (18:49 IST)
“இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு ஒன்றை முன்வைப்பதற்கான ஏற்பாடுகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். ஒற்றையாட்சிக்கு உள்ளேயே இத்தீர்வு இருக்கும். தற்காலிகமான தீர்வுகளை எங்களால் நடைமுறைப்படுத்த முடியாது. எமக்குள்ள அனுபவம், கடந்தகால படிப்பினைகளின் படி இத்தீர்வுத் திட்டம் இருக்கும்” என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள காலிமுகத்திடலில் இன்று (திங்கட்கிழமை) காலை நடந்த சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திர நாள் விழாவில் அவர் பேசுகையில், “சுதந்திரம் என்பது ஓரினத்தவர்கள் மட்டும் அனுபவிப்பதற்காக பெறப்பட்டதல்ல. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், பரங்கியர் ஆகியோர் இணைந்து இச்சுதந்திரத்தினை அனுபவிக்க வேண்டும். சுதந்திரத்திற்காக தொடக்கத்தில் அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து போராடினர். இன்று அந்நிலை இல்லை. அவ்வாறு ஒன்றிணைந்து போராட முன்வருவார்களாயின் அவர்கள் புலிகளின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகின்றனர்.
இதனால் வடக்கையும் மீட்போம். அங்கும் அரசியல் தீர்வு ஒன்றை முன்வைப்போம். அப்போதுதான் அங்கிருந்தும் எம்முடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்காக பலர் முன்வருவர்” என்றார்.
“நாடு சுதந்திரமடைந்து ஆறுபது ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. கடந்த முப்பது ஆண்டுகளில் நாட்டில் எண்ணிலடங்கா சிக்கல்கள் உருவாகியுள்ளன. பயங்கரவாதத்தை தோற்கடித்து நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவது இன்று மிகப்பெரிய சவாலாக எங்கள்முன் உள்ளது. சிறிலங்காவில் ஏற்கனவே இருந்த அரசுகள் இச்சவாலைச் சந்திக்க முடியாமல், அதை அடுத்து வரும் அரசுகளிடம் விட்டுச்சென்றன.
எனது தலைமையிலான அரசு எடுத்த நடவடிக்கைகளால் பல வெற்றிகளை நாம் ஈட்டியிருக்கிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் கிழக்குப் பகுதியின் பெரும்பாலான பகுதிகளை மீட்டு விட்டோம். தற்போது வடக்கில் மட்டும்தான் புலிகள் நிலைகொண்டுள்ளனர். அதுவும் அவர்கள் இரண்டு மாவட்டங்களில் மட்டுமே நிலை கொண்டுள்ளனர்.” என்று கூறிய ராஜபக்ச, “இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு ஒன்றை முன்வைப்பதற்கான ஏற்பாடுகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். ஒற்றையாட்சிக்குள்ளேயே இத்தீர்வு இருக்கும். பரீட்சார்த்தமான தீர்வுகளை எம்மால் நடைமுறைக்கு விடமுடியாது. எமக்குள்ள அனுபவம் மற்றும் கடந்தகால படிப்பினைகளின் படி இத்தீர்வுத்திட்டம் இருக்கும்.” என்றார்.
மேலும், “இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பயங்கரவாதத்தை தோற்கடிக்கலாம் என்று எவரும் நம்பவில்லை. ஆனால் இந்த இரண்டு வருட காலத்தில் பயங்கரவாதத்தை தோற்கடிக்கலாம் என்பதனை நிரூபித்திருக்கின்றோம். இதே இரண்டு வருடத்தில் இனப்பிரச்சனையைத் தீர்க்கக்கூடியதொரு நிலையையும் இன்று ஏற்படுத்தியிருக்கின்றோம்” என்ற ராஜபக்ச, அதற்கு அண்டை நாடுகளில் இருந்து கிடைக்கும் உதவிகள் தொடர்ந்து கிடைக்கும் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.