இன்று உலக நன்செய் நில தினம்!
சனி, 2 பிப்ரவரி 2008 (18:46 IST)
உலக முழுவதும் நன்செய் நிலங்கள் தினம் இந்த ஆண்டு வளமான நன்செய் நிலம், வளமான மக்கள் என்ற மைய இலக்குடன் இன்று கொண்டாடப்படுகிறது.
உலகில் 100 கோடி மக்கள் நல்ல குடிநீரைப் பெற இயலாமல் உள்ளனர். அதேப்போல முறையான கழிவறை வசதியில்லாமல் 200 கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நன்செய் நிலங்களும், ஆறுகளும் தான் நல்ல நீருக்கும், வாழ்க்கைக்கும் ஆதாரங்கள். ஆனால் அவை இன்று வேகமாக அழிந்து வருகின்றன.
வளரும் நாடுகளில் பல கடுமையான தண்ணீர் பற்றாக் குறையை சந்தித்து வருகின்றன. இதனால் மக்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஏற்கெனவே உலகில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட நன்செய் (நெல், கோதுமை போன்ற முக்கிய பயிர் விளைக்கும்) நிலங்கள் அழிந்துக் கொண்டிருக்கின்ற நிலையில், இவற்றை மறு சீரமைக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
நன்செய், சதுப்பு நிலங்கள் தான் நீர் ஆதாரங்கள் மற்றும் நீர் பிடிப்புப் பகுதிகள் ஆகும். எனவே அவற்றை அழிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்று உலக நன்செய் நிலக் கூட்டமைப்பின் நன்னீர் திட்ட இயக்குநர் ஜேமி பிட்டாக் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு மக்களுக்கு எரிசக்தி, உணவு உற்பத்தி, குடிநீர் வழங்குவதற்காக எத்தனை அணைகள் கட்டியுள்ளோம் என்பது முக்கியமல்ல என்றும், ஏரிகளும், ஆறுகளும் முறையாக இயங்காவிட்டால் போதுமான தண்ணீர் இல்லாமல் போகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கடந்த 1971 ஆம் ஆண்டு ஈரான் நாட்டில் உள்ள காஷ்பியன் கடலோரம் அமைந்துள்ள ராம்சார் நகரில் நடைப்பெற்ற நன்செய் நிலங்கள் தொடர்பான மாநாட்டில் ஏறக்குறைய உலகின் அனைத்து நாடுகளும் பங்கேற்று ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டன.
இம் மாநாட்டில் 158 நாடுகள் பங்கேற்றன. 1,717 நன்செய் நிலப் பகுதிகளில் உள்ள 159 மில்லியன் ஹெக்டேர் நிலங்களை சீரமைக்க அப்போது முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான நன்செய் நிலங்களை அரசுகள் பாதுகாத்து வருகின்றன.
ஈரப்பதமுள்ள நன்செய் நிலங்கள், சதுப்பு நிலங்கள் உயிரினங்களுக்கு முக்கிய இயற்கை ஆதாரமாக உள்ளது. குறிப்பாக சுத்தமாக குடிநீர், அரிசி, காய்கறிகள், மருந்துகள் உற்பத்திக்கு நன்செய் நிலங்கள் இன்றியமையாதது. கடந்த 1971 ஆம் ஆண்டு நடைப்பெற்ற மாநாட்டின் நோக்கமே நன்செய் நிலங்களை தேவையான அளவுக்கு பயன்படுத்துவது என்பது தான்.
இந்த நாளையொட்டி இன்று உலகம் முழுவதும், நன்செய் நிலங்களாக நிலங்களை மாற்றுவது எப்படி என்ற கட்டுரைப் போட்டி நடத்தப் படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் தங்கள் எண்ணங்களையும், கருத்துக்களையும் வெளிப்படுத்தலாம்.