'தமிழ் மக்கள் மீதான உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வமான அணுகுமுறையாக தமிழர்களின் இறைமையை அங்கீகரிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்' என்று வலியுறுத்தி ஐ.நா.விற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
இதுகுறித்து, ஐ.நா.வின் பொதுச் செயலர் பான் கி மூனுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இன்று எழுதியுள்ள கடிதத்தில், ''உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளின் கவலைகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது சிறிலங்கா அரசின் கடமையாகும். ஆனால் ஐ.நா. அதிகாரிகளை "பயங்கரவாதிகள்" என்றும் "காலனியவாதிகள்" என்றும் சிறிலங்கா முத்திரை குத்துகிறது. இந்தத் தீவில் உரிமை மீறல் பிரச்சனைகளைத் தீர்க்க சர்வதேச நாடுகள் எடுத்த எல்லா முயற்சிகளையும் சிறிலங்கா அரசு புறக்கணித்துள்ளது'' என்று குற்றம்சாற்றி உள்ளார்.
''சிறிலங்க அரசானது 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான நாள் முதல் கடந்த 6 ஆண்டு காலமாகத் தொடர்ச்சியாகத் தமிழ் மக்களைக் குறி வைத்துத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. தற்போதைய சிறிலங்க அதிபர் கடந்த 2005 ஆம் ஆண்டு பொறுப்பேற்றது முதல் 132 சிறுவர்கள் உள்ளிட்ட 2,056 தமிழ் மக்களை சிறிலங்கப் படைகள் படுகொலை செய்துள்ளன.
கடந்த 2007 ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து சிறிலங்க அரசு ஒருதலைபட்சமாக வெளியேறிய பின்னர், போர் நிறுத்த கண்காணிப்புக் குழு வெளியேறிய பின்னர், ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகளை அனுமதிக்கவே முடியாது என்று மறுத்த பின்னர், சிறிலங்க அரசினால் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது'' என்று கூறியுள்ள நடேசன் சில தாக்குதல்களைப் பட்டியலிட்டுள்ளார்.
அதில், "மன்னாரில் நேற்று (ஜனவரி 28) பொதுமக்கள் பேருந்து மீது சிறிலங்க இராணுவத்தினர் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 12 சிறுவர்கள் உள்ளிட்ட 18 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 3 வாரங்களுக்கு முன்னதாக ஜனவரி 4 ஆம் தேதி முல்லைத்தீவு மாவட்டம் உப்புக்குளம் கிராமத்தின் மீதான விமானப்படைத் தாக்குதலில் 3 வயது முதல் 16 வயது வரையிலான 7 சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நவம்பர் 27ஆம் தேதி பள்ளி மாணவர்களின் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 6 சிறுவர்கள் கொல்லப்பட்டனர். அதே நாளில் புலிகள் குரல் வானொலி நிறுவன கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதற்கு 2 நாட்களுக்கு முன்பு முல்லைத் தீவு மாவட்டம் தருமபுரம் கிராமத்தின் மீதான வான்குண்டுத் தாக்குதலில் 3 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
நவம்பர் மாதம் 8 ஆம் நாள் முல்லைத்தீவு மாவட்டம் அளம்பில் கிராமத்தின் மீதான வான்குண்டுத் தாக்குதலின் போது ஒரு சிறுவன் கொல்லப்பட்டதுடன் மற்றொரு சிறுவன் காலை இழந்தான்" என்று குறிப்பிட்டுள்ளார்.