அதிபர் பதவியில் இருந்து விலகுங்கள்: முஷாரஃப்புக்கு புலனாய்வுத்துறை முன்னாள் இயக்குநர் கடிதம்!
வெள்ளி, 25 ஜனவரி 2008 (16:33 IST)
அதிபர் பதவியில் இருந்து விலகுங்கள்: முஷாரஃப்புக்கு புலனாய்வுத்துறை முன்னாள் இயக்குநர் கடிதம்!
அதிபர் பதவியில் இருந்து உடனடியாக விலகுங்குள் என்று அதிபர் பர்வேஷ் முஷாரஃப்புக்கு பாகிஸ்தான் புலனாய்வுத்துறை முன்னாள் இயக்குநர் மசூத் செரீப் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அதிபர் பர்வேஷ் முஷாரஃப்புக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், எவ்வளவுக்கு எவ்வளவு குறைந்த காலத்தில் முடியுமோ அவ்வளவு குறுகிய காலத்தில் பாகிஸ்தான் அதிபர் பதவியில் இருந்து முஷாரஃப் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும், அப்போது தான் அரசு அதிகாரத்தை எந்தவித சிக்கலுமின்றி அரசியல்வாதிகளிடம் விரைந்து ஒப்படைக்க ஏதுவாக இருக்கும் என்றும் தமது கடிதத்தில் கூறியுள்ளார்.
அதிபர் பதவியில் இருந்து நீங்கள் பதவி விலகினால் நாடு முழுவதும் உள்ள பாகிஸ்தானியர்கள் மீண்டும் ஒருவர் ஒருவருடன் அமைதியுடன் வாழ்வார்கள் என்றும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் முஷாரஃப்பும், அவரது ஆட்சியும்தான் பாகிஸ்தானுக்கு மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளதாகவும், பாகிஸ்தான் தற்போது சந்தித்துவரும் மிகப்பெரிய சவால்களுக்குத் தீர்வுகாணும் திறன் முஷாரஃப்புக்கு இல்லை என்பதையும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு நடைப்பெற்ற மோசமான நிகழ்வுகள் மீண்டும் நடைப்பெற்று விடக்கூடாது என்றும், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் தேதி நீதித்துறையின் மீது முஷாரஃப் அரசு எடுத்த எல்லை மீறிய நடவடிக்கை தான் கடந்த ஆண்டு முழுவதும் பாகிஸ்தானில் விரும்பத்தகாத நிகழ்வுகள் தொடர்கதையாக அரங்கேற காரணமாக அமைந்ததாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி பாகிஸ்தான் மக்கள் கட்சித்தலைவர் பெனாசீர் பூட்டோ தேர்தல் பிரச்சாரத்தின் போது படுகொலைச் செய்யப்பட்டதன் மூலம் சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் தலைவரையும், அறிவு ஜீவியையும் பாகிஸ்தான் இழந்ததோடு, இந்த கோர நிகழ்வுக்கு பின்னர் நாடு செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டு பரிதாப நிலையில் உள்ளதாகவும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சட்டம் - ஒழுங்கு நிலை மிகவும் துயரத்தைத் தரத் தக்கதாக உள்ளதாக தெரிவித்துள்ள அவர், அமைதி சூழ்நிலை நிலவி வந்த மலைப் பிரதேசங்கள், வடமேற்கு எல்லைப்புற மாகாணங்களில் நிலைமை இந்த அளவுக்கு மோசமடைய காரணம் முஷாரஃப் பிரச்சனையைக் கையாண்டவிதம் தான் என்று தாம் நம்புவதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் பர்வேஷ் முஷாரஃப், நீங்கள் பதவி விலகுவதோடு, பாகிஸ்தானின் கனவை நனவாக்க பாதை அமைத்து கொடுத்து அதில் ஒருவராக உங்களை இணைத்துக் கொள்ளுங்கள் என்று உங்களை நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன் என்றும், என்னுடைய இந்த கருத்தை கோடிக்கணக்கான பாகிஸ்தானியர்கள் வழிமொழிவார்கள் என்றும் அதிபர் பர்வேஷ் முஷாரஃப்புக்கு எழுதியுள்ள கடிதத்தில் மசூத் செரீப் கேட்டுக் கொண்டுள்ளார்.