உள்விவகாரங்கள்: இந்தியாவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை!
வெள்ளி, 25 ஜனவரி 2008 (14:43 IST)
தங்கள் நாட்டு உள்விவகாரங்களில் தலையிடுவதை இந்தியா உடனடியாக நிறுத்திக் கொள்ளாவிட்டால், இரு நாடுகளுக்கு இடையிலான அமைதி முயற்சிகள் பாதிக்கப்படும் என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.
இது குறித்து அந்நாட்டு இடைக்கால அரசின் தகவல் தொடர்பு அமைச்சர் நிஷார் ஏ மேமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவுடன் எந்தச் சிக்கல் இருந்தாலும் அதை பேச்சின் மூலம் தீர்த்துக் கொள்ளவே பாகிஸ்தான் விரும்புகிறது. ஆனால், பாகிஸ்தானின் உள்விவகாரங்களில் இந்தியா நேரடியாக தலையிட்டால், இரு நாடுகளுக்கு இடையிலான அமைதி முயற்சிகள் பாதிக்கப்படும்.
க்வாடர் பகுதியில் பாகிஸ்தான் கட்டிவரும் துறைமுகப் பணிகளைத் தடுப்பதற்கு இந்தியா முயற்சிக்கிறது. இந்தத் துறைமுகம் உருவானால், வர்த்தக ரீதியாக பாகிஸ்தான் வளர்ந்து விடும் என்று இந்தியா அஞ்சுகிறது.
க்வாடர் துறைமுகப் பணிகளைக் கண்காணித்துத் தடுப்பதற்காக ஆஃப்கானிஸ்தானில் 13 தகவல் மையங்களை இந்தியா அமைத்துள்ளது. இதனால் பலுசிஸ்தான் பகுதியில் அமைதியைக் குலைப்பதற்கும், பயங்கரவாதத்தை வளப்பதற்கும் இந்தியா உதவுகிறது.
இதுபோல பாகிஸ்தானின் உள்விவகாரங்களில் தலையிடும் போக்கை இந்தியா உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவுடன் நல்லுறவுகளைத் தொடர்வதற்கு நாங்கள் விரும்புகிறோம். ஆனால், எங்கள் நாட்டு உள்விவகாரங்களில் தலையிட்டால் சகித்துக் கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.