நேரடிப் பேச்சு: புலிகளுக்கு சிறிலங்கா அழைப்பு?
வெள்ளி, 11 ஜனவரி 2008 (19:40 IST)
இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், சிறிலங்கா அரசு உருவாக்கியுள்ள அதிகாரப் பகிர்வுத் திட்டத்திற்கு எல்லா அரசியல் கட்சிகளும் ஒப்புதல் அளித்த பிறகு, அதனடிப்படையில் நேரடிப் பேச்சு நடத்த வருமாறு விடுதலைப் புலிகளுக்கு அந்நாட்டு அரசு அழைப்பு விடுக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து டெய்லி மிரர் நாளிதழுக்கு, சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசகர் பசில் ராஜபக்ச அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
அதிகாரப் பகிர்வுத் திட்டத்திற்காக அரசு உருவாக்கியுள்ள பரிந்துரைகளுக்கு ஜனநாயக ரீதியாக இயங்கும் எல்லா அரசியல் அமைப்புகளும் ஒப்புதல் அளித்தபிறகு, அவை நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் இறுதி செய்யப்படும்.
பின்னர், அப்பரிந்துரைகளின் அடிப்படையில் நேரடிப் பேச்சிற்கு வருமாறு விடுதலைப் புலிகளுக்கு அழைப்பு விடுப்பது குறித்து சிறிலங்கா அரசு முடிவெடுக்கும்.
சிறிலங்காவை மேம்படுத்துவதற்காக அதிபரால் உருவாக்கப்பட்ட 'மகிந்த சிந்தனை' திட்டத்தின் அடிப்படையில், அதிகாரப் பகிர்வுத் திட்டத்திற்கான பரிந்துரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வசிக்கும் சிங்களர்கள், முஸ்லிம்கள், தமிழர்கள் மற்றும் இனப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள எல்லாத் தரப்பினரின் கருத்துகளையும், உணர்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு அரசின் பரிந்துரைகள் அமைந்துள்ளன.
அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு, புதிய பரிந்துரைகள் அதிபர் மகிந்த ராஜபக்ச முன்பு வைக்கப்படும். அநேகமாக அது இந்த மாத இறுதிக்குள் நடக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.