பயங்கரவாதிகளிடம் பாகிஸ்தான் அணு ஆயுதங்கள்: சர்வதேச அணுசக்தி முகமை கவலை!
புதன், 9 ஜனவரி 2008 (17:50 IST)
பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கைகளில் சிக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று சர்வதேச அணு சக்தி முகமையின் தலைவர் முகமது எல்பராடி கவலை தெரிவித்தார்.
இது குறித்து அரபு நாளிதழ் ஒன்றுக்கு எல்பராடி அளித்துள்ள பேட்டியில், "பயங்கரவாதிகளின் புகழிடமாக மாறிவரும் பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்கள், பாகிஸ்தான் அல்லது ஆஃப்கானிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் பயங்கரவாதிகளின் கைகளில் சிக்குவதற்கு வாய்ப்புள்ளது என்று நான் கவலைப்படுகிறேன்" என்றார்.
பாகிஸ்தானில் சுமார் 50 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால், எளிதில் கையாள முடியாத வகையில் அவை பிரித்து வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.