ஸ்காட்லாந்து யார்ட் விசாரணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
புதன், 9 ஜனவரி 2008 (12:34 IST)
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அயல்நாட்டு முகவாண்மை (ஸ்காட்லாந்து யார்ட்) விசாரணை நடத்துவதற்கு எதிராக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் விவரம் வருமாறு:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பிரிட்டனின் ஸ்காட்லாந்து யார்ட் விசாரணை நடத்துவது சட்டத்திற்குப் புறம்பானது.
இதனால், உள்நாட்டு விசாரணை அமைப்புகளின் மீதும், அவற்றின் புலனாய்வுத் திறன் மீதும் மக்களுக்கு உள்ள நம்பிக்கை குறையும் வாய்ப்புகள் அதிகம்.
கொலை வழக்கில், அயல்நாட்டு விசாரணை முகவாண்மைகள் கண்டறிந்த விடயங்களை ஆதாரமாகக் கொண்டு, பாகிஸ்தானின் அரசியல் சட்டத்தைப் பின்பற்றும் எந்த நீதிமன்றமாவது விசாரணை நடத்த முடியுமா? என்று அரசு தெரிவிக்க வேண்டும்.
அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவை அடிப்படையாகக் கொண்டு, அயல்நாட்டு முகவாண்மைகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டன என்று, பாகிஸ்தான் இடைக்கால அரசும், அதன் கீழ் செயல்பட்டு வரும் பஞ்சாப் மாகாண அரசும் விளக்கமளிக்க வேண்டும்.
மேலும், அயல்நாட்டு முகவாண்மையின் விசாரணைக்குத் தடை விதிக்குமாறு உள்துறை அமைச்சகத்துக்கும், இந்த வழக்கு முடியும் வரை, பாகிஸ்தானிற்குள் அயல்நாட்டு முகவாண்மையால் சேகரித்து அளிக்கப்பட்ட எல்லா ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு இடைக்கால அரசிற்கும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, பெனாசிர் கொலை வழக்கில் பாகிஸ்தான் விசாரணை அமைப்புகள்தான் விசாரணை நடத்தும் என்றும், அவற்றுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை மட்டுமே ஸ்காட்லாந்து யார்ட் அதிகாரிகள் அளிப்பார்கள் என்றும் அதிபர் முஷாரஃப் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.