பெனாசிர் கொலை: குற்றவாளிகளை கண்டறிய முஷாரஃப் உறுதி!
புதன், 9 ஜனவரி 2008 (11:40 IST)
பெனாசிர் படுகொலைக்குப் பின்னால் உள்ள மர்மத்தை வெளிக்கொணர்ந்து குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருவதில் தனது அரசு உறுதியாக உள்ளதென்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் விசாரணை அமைப்புகளுக்கு உதவியாக, புகழ்பெற்ற ஸ்காட்லாந்து யார்ட் காவல் அதிகாரிகளும் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், ஸ்காட்லாந்து யார்ட் அதிகாரிகள் நேற்று அதிபர் முஷாரஃப்பைச் சந்தித்து விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைத் தெரிவித்தனர். அப்போது, தங்களுக்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பை பாகிஸ்தான் அரசு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
மேலும், விசாரணையை இந்த மாத இறுதிக்குள் முடிப்பதற்கு முயற்சிப்பதாகவும் ஸ்காட்லாந்து யார்ட் அதிகாரிகள் முஷாரஃப்பிடம் உறுதியளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு பதிலளித்த முஷாரஃப், பெனாசிர் கொலை வழக்கு விசாரணையின் முன்னேற்றத்திற்கு ஸ்காட்லாந்து யார்ட் அதிகாரிகளின் தொழில்நுட்ப உதவி பெரிதும் உதவியதாகக் குறிப்பிட்டார். மேலும் அவர்களின் தடயவியல் நுட்பங்களையும் பாராட்டினார்.
விசாரணையில் தனது அரசு எந்தவிதத்திலும் எதிர்மறையாகத் தலையிடாது என்று உறுதியளித்த முஷாரஃப், பாகிஸ்தானைச் சீர்குலைக்க முயற்சிக்கும் சக்திதான் பெனாசிரைக் கொலை செய்துள்ளது என்று கூறினார்.
மேலும், பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு உடனடியாகச் செவிசாய்த்த பிரிட்டன் அரசிற்கு முஷாரஃப் நன்றி தெரிவித்தார்.