இந்தியர்களை வேலைக்குத் தேர்வு செய்ய மலேசியா தடை!
செவ்வாய், 8 ஜனவரி 2008 (19:14 IST)
கோயில் பூசாரிகள், சிற்பிகள், இசைக் கலைஞர்கள் போன்ற பணிகளுக்கு இந்தியர்களைத் தேர்வு செய்ய மலேசிய அரசு தடை விதித்துள்ளது.
அந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவழியினர் நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியர்களைப் பணிக்கு அமர்த்த வேண்டாம் என்று மலேசிய அரசின் சார்பில் அதிகாரபூர்வ சுற்றறிக்கை கடந்த மாதம் 18 ஆம் தேதியே அனுப்பப்பட்டு விட்டதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், இந்தத் தடை எல்லா வேலைகளுக்கும் பொருந்துமா என்று அந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
மலேசிய அரசின் இந்த முடிவினால், தாவோயிசம், சீக்கிசம், ஹிந்துயிசம், பெளத்தம், கிறித்தவம் ஆகியவற்றுக்கான மலேசிய ஆலோசனைக் குழு ((MCCBCHST)) அதிர்ச்சி அடைந்துள்ளது.
இந்தக் குழுவின் சார்பில், கோயில் பூசாரிகள், சிற்பிகள், இசைக் கலைஞர்கள் பணிகளுக்கு பெறப்பட்ட புதிய விண்ணப்பங்களுக்கு பணி அனுமதி வழங்க மலேசியக் குடியுரிமை அலுவலகம் மறுத்துவிட்டது.
அதேபோல ஏற்கெனவே பணியாற்றிவரும் பூசாரிகளுக்கு 6 மாதமும், இசைக் கலைஞர்களுக்கு 3 மாதமும், சிற்பிகளுக்கு 1 வாரமும் மட்டுமே விசா நீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளது.
அதன்பிறகு மீண்டும் விசா நீட்டிக்கப்படுமா என்பதற்கு எந்த விளக்கமும் குடியுரிமை அலுவலகத்தால் தெரிவிக்கப்படவில்லை.