பெனாசிர் கொலை: ஸ்காட்லாந்து யார்ட் விசாரணை தீவிரம்!
திங்கள், 7 ஜனவரி 2008 (12:19 IST)
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஸ்காட்லாந்து யார்ட் காவல் அதிகாரிகள் தங்கள் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இன்று ராவல்பிண்டி மருத்துவமனையில், பெனாசிருக்கு இறுதிகட்ட சிகிச்சை அளித்த 2 மருத்துவர்களிடம் ஸ்காட்லாந்து யார்ட் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.
அப்போது, பெனாசிரின் எக்ஸ் ரே, மருத்துவ அறிக்கை உள்ளிட்ட ஆவணங்கள் பற்றி மருத்துவர்கள் விளக்கினர். பெனாசிர் மரணத்திற்கு உடற்கூறு ரீதியான காரணங்களில், காவல் அதிகாரிகள் கேட்ட சந்தேகங்களுக்கு பதிலளித்தனர்.
முன்னதாக பெனாசிர் படுகொலை செய்யப்பட்ட லியாகத் பாக் பூங்காவிற்குச் சென்ற ஸ்காட்லாந்து யார்ட் அதிகாரிகள் மிகுந்த நெருக்கடியைச் சந்தித்தனர்.
ஏனெனில், தாக்குதல் நடந்த பகுதி நினைவிடமாக மாற்றப்பட்டிருந்தது. அங்கு எந்தத் தடயமும் கிடைக்காத வகையில் தண்ணீரால் கழுவி விடப்பட்டிருந்தது.
இதையடுத்து, காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பெனாசிர் பயன்படுத்திய குண்டு துளைக்காத காரை மீண்டும் ஆய்வு செய்தனர்.
அப்போது, தங்களுக்குக் கிடைக்கும் தகவல்களை பாகிஸ்தான் அரசு, பிரிட்டன் தூதரகம், காமன் வெல்த் கூட்டமைப்பு ஆகியோருடன் பகிர்ந்துகொள்வதாக ஸ்காட்லாந்து யார்ட் அதிகாரிகள் தெரிவித்தனர்.