இலங்கைக்கு ராணுவ தளவாட ஏற்றுமதி நிறுத்தம்: அமெரிக்கா!
ஞாயிறு, 6 ஜனவரி 2008 (17:04 IST)
இலங்கைக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதை அமெரிக்கா திடீரென நிறுத்தி வைத்துள்ளது. இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதை கண்டித்து அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது.
இலங்கைக்கு அமெரிக்கா ஆயுத உதவிகளையும், அது தொடர்பான சேவைகளையும் வழங்கி வந்தது. ஆனால் இலங்கையில் மனித உரிமைகள் தொடர்ந்து மீறப்படு வதற்கு அமெரிக்கா கண்டனமும், கவலையும் தெரிவித்துவந்தது. மனித உரிமைகள் மீறப்படுவதை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அது வலியுறுத்தி வந்தது.
இந்த நிலையில், மனித உரிமை களை மேம்படுத்த வலியுறுத்தி இலங்கைக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதை அமெரிக்கா திடீரென நிறுத்தி உள்ளது. கடந்த மாதம் அதிபர் ஜார்ஜ் புஷ் கையெழுதிட்ட அமெரிக்க வெளியுறவுத்துறையின் சட்டத்திற்கு இணங்க இந்த முடிவு எடுக்கப் பட்டிருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு வர்த்தக கட்டுப்பாடுகள் இயக்ககம் தனது இணையதளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், `இலங்கைக்கு ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்வதற்கான அனைத்து அனுமதிகளும் மறுக்கப்படுகிறது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட லைசன்சுகள் தடை செய்யப்படுகின்றன. கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றுக்கு தேவையான தொழில்நுட்பங்களை மட்டும் வரையறைக்கு உட்பட்டு வழங்கலாம். அதுவும் தொடர்ந்து கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும்' என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே இலங்கை அரசு மனித உரிமைகளை மீறி வருவதாக மனித உரிமைகள் அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் ராணுவத்தில் குழந்தைகளை சேர்ப்பதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. எனவே, மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று இலங்கை அரசை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஆயுத ஏற்றுமதிக்கு அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும் அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதி விலக்குகளால் தங்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று இலங்கை அதிகாரிகள் கருதுகின்றனர்.
உளவுத்தகவல்களை பரிமாறி கொள்வது போன்ற பாதுகாப்பு தொடர்பான இலங்கை-அமெரிக்கா இடையேயான முக்கிய திட்டங்களுக்கு அமெரிக்க சட்டம் தடைவிதிக்கவில்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.