மலேசியாவில் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தை நீக்கக் கோரி நடத்தப்பட்ட பேரணியில் காவல்துறையினர் தாக்குதல் நடத்தி அதில் பங்கேற்றவர்களை விரட்டியடித்தனர்.
மலேசியாவில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு அரசுக்கு எதிரான பேரணிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. மலேசியாவில் அரசியல் எதிரிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வரும் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நேற்றிரவு கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததையும் மீறி சுமார் 300 பேர் கோலாலம்பூரில் உள்ள சுதந்திர சதுக்கம் முன்பாக கூடினார்கள். அப்போது மலேசிய காவல்துறையினர் அவர்களை தள்ளிவிட்டதுடன், பேரணியில் ஈடுபட்டவர்கள் மீது பீரங்கிகளை கொண்டு தண்ணீரைப் பாய்ச்சி தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டியடித்தனர்.
இந்தப் போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும் எதிர்பார்த்ததை விட அதிக எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொண்டதாக உள்நாட்டு பாதுகாப்பு சட்ட எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் சையத் இப்ராஹிம் சையத் நோ தெரிவித்தார்.
அனைத்து குடிமக்களுக்கும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் உரிமை உள்ளது என்பதை எடுத்துக்கூறவே இந்த பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மலேசியாவில் கடந்த நவம்பர் மாதம் அரசுக்கு எதிராக பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருந்த ஹிண்ட்ராப் இயக்கத்தை சேர்ந்த 5 பேர் சமீபத்தில் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.