48 நிமிடங்கள் பேட்டரியால் விமானம் பறந்தது!
வியாழன், 3 ஜனவரி 2008 (18:02 IST)
சுற்றுச் சூழலுக்கு உகந்த விமானச் சேவை நடைமுறைக்கு வரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை அண்மையில் எலெக்ட்ரிக் மோட்டரைக் கொண்டு விமானத்தை சோதனை முறையில் ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விமானி ஒருவர் வெற்றிகரமாக இயக்கி காட்டியுள்ளது மூலம் தெரிய வருகிறது.
ஒற்றை இருக்கைக் கொண்ட மரத்தாலான எலக்ட்ரா ரக விமானத்தை 48 நிமிடங்கள் மொத்தம் 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆல்ப்ஸ் மலையின் தென் பகுதியில் பேட்டரி சக்தியில் பிரான்ஸ் விமானி பறந்து காட்டினார். பசுமை விமான சேவையை உருவாக்கும் விதமாக ஏ.பி.ஏ.எம்.இ. குழுமம் மேற்கொண்ட ஆய்வின் பலனாக இந்த சோதனை முயற்சி எட்டப்பட்டுள்ளது. எலெக்ட்ரா விமானம் உண்மையிலேயே ஒரு விமானம் தான் என்றும், அதற்குரிய சான்றிதழ் உள்ளது என்று ஏ.பி.ஏ.எம்.இ. குழுமத்தின் தலைவர் ஆனி லேலண்ட் தெரிவித்துள்ளார்.
கடந்த 18 மாதங்களுக்கு முன்பு பிரான்ஸ் ஏரோ ஸ்பேஷ் நிறுவனம், சில நன்கொடையாளர்களும் நிதி வழங்கியதைத் தொடர்ந்து தனது குழுவினருடன் இப்பணியைத் தொடங்கியதாக ஆனி லேலண்ட் கூறியுள்ளார். நாங்கள் இந்த பணியைத் தொடங்கிய போது, இதனை நாங்கள் செய்து முடிப்போம் என்று யாரும் நம்பவில்லை என்று கூறியுள்ளார்.
புதிய தலைமுறை இலகு ரக லித்தியம் - பாலிமர் பேட்டரிகள் எலெக்ட்ரா விமானத்தின் 9 மீட்டர் இறக்கைகள் இயங்கத் தேவையான மின்சக்தியை வழங்கின. எலெக்ட்ராவில் பயன்படுத்தப்பட்ட மோட்டார், பேட்டரிகளின் விலை, சிறிய பெட்ரோல் இயந்திரங்களின் விலை தான் என்றும் கூறியுள்ளார். தற்போது இது விலைக் கூடுதலாகத் தோன்றினாலும், எதிர்காலத்தில் எரிபொருள் விலை எப்படி உயருமோ என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.