இலங்கைப் பிரச்சனைக்கு பேச்சின் மூலமே தீர்வுகாண முடியும் : நார்வே!
வியாழன், 3 ஜனவரி 2008 (13:55 IST)
மனித உரிமை மீறல்களும், உயிரிழப்புகளும் அதிகரித்துவரும் நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கைவிடுவதென்று சிறிலங்கா அரசு மேற்கொண்டுள்ள முடிவு மிகவும் துன்பகரமானது என்று கூறியுள்ள நார்வே, இலங்கைப் பிரச்சனைக்கு பேச்சின் மூலமே தீர்வுகாண முடியும் என்று வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக நார்வே அமைச்சர் எரிக் சோல்ஹீம் கூறியுள்ளதாவது :
போர் நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு 14 நாட்கள் அவகாசம் தர வேண்டும். ஆனால் அது இதுவரை தரப்படவில்லை.
இப்போதுள்ள சூழ்நிலையில், இலங்கையில் இருந்து போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனினும் அவர்கள் எப்போது வெளியேறுவார்கள் என்பதை தற்போது கூற முடியாது.
இலங்கைப் பிரச்சனைக்கு பேச்சு மூலமான தீர்வே சாத்தியமானது. சிறிலங்கா அரசு இன்றோ அல்லது நாளையோ மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் திரும்பலாம். ஆனால் இந்த இடைவெளியில் துரதிர்ஷ்டவசமாக அதிகளவான மக்கள் பலியாகலாம் என்று அஞ்சுகிறோம்.
இவ்வாறு எரிக் சோல்ஹீம் தெரிவித்தார்.
மொத்தம் 30 பேரைக் கொண்ட போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்கள் குழுவில் நார்வேயைச் சேர்ந்த 20 பேரும், ஜஸ்லாந்தைச் சேர்ந்த 10 பேரும் பணியாற்றி வருகின்றனர்.
விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியம் இணைத்த பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஃபின்லாந்து, டென்மார்க், சுவீடன் நாட்டு கண்காணிப்பாளர்கள் வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.