பாக். மசூதியில் தற்கொலைத் தாக்குதல் 54 பேர் பலி

வெள்ளி, 21 டிசம்பர் 2007 (12:49 IST)
பாகிஸ்தானில் வடமேற்குப் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் ஈத் பெருநாளை முன்னிட்டு நடந்துக் கொண்டிருந்த தொழுகையில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 54 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமுற்றனர்.

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள சார்சாடா மாவட்டத்தில் உள்ள மசூதியில் இன்று காலை ஈத் பெருநாள் தொழுகை நடந்து கொண்டிருந்தது.

அப்பொழுது தொழுகை நடந்து கொண்டிருந்த மசூதிக்குள் புகுந்த ஒருவர் தன் உடலோடு வைத்திருந்த குண்டை வெடிக்கச் செய்ததாகவும், இதில் அந்த இடத்திலேயே 54 பேர் உயிரிழந்ததாகவும் அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஷா கூறியுள்ளார்.

இத்தொழுகையில் கலந்து கொண்ட பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான ·ப்தாப் அகமது கான் ஷர்பாவோ உயிர் தப்பினார். அவரது மகனும் மைத்துனரும் காயமுற்றனர்.

இந்த தாக்குதல் ·ப்தாப் அகமது கானை குறி வைத்தே நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதியன்று இதே கர்சாடா மாவட்டத்தில் ·ப்தாப் அகமது கான் பேசிய கூட்டத்தில் தற்கொலைத் தாக்குதல் நடந்தது. அதில் அவர் உயிர் தப்பினார். அந்த தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் காயமுற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்