இந்திய மாணவர்கள் கொலை: துப்பு கொடுப்பவர்களுக்கு பரிசு அதிகரிப்பு!
Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2007 (11:15 IST)
அமெரிக்காவின் லூசியானா பல்கலைக்கழகத்தில் படித்துவந்த இந்திய மாணவர்கள் இருவரைக் கொலை செய்த குற்றவாளிகள் பற்றி தகவல்கள் தருபவர்களுக்கு பரிசாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1,000 டாலருடன் கூடுதலாக 4,000 டாலர்கள் வழங்கப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தன் பெயரை வெளியிட விரும்பாத நன்கொடையாளர் ஒருவர் இந்த அறிவிப்பைக் காவல்துறை மூலம் வெளியிட்டுள்ளார்.
டிசம்பர் 24 ஆம் தேதி கிறிஸ்துமஸ் அன்று நள்ளிரவுக்குள் துப்பு கொடுப்பவர்களுக்கு மட்டுமே கூடுதலாக 4,000 டாலர் வழங்கப்படும். அதன்பிறகு துப்பு தருபவர்களுக்கு 1,000 டாலர் மட்டும்தான் வழங்கப்படும் என்றும் அவர் நிபந்தனை விதித்துள்ளார்.
லூசியானா பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி. படித்துவந்த ஆந்திர மாநிலம் குர்நூலைச் சேர்ந்த உயிரியல் மாணவர் சந்திரசேகர ரெட்டி, ஹைதராபாத்தைச் சேர்ந்த வேதியியல் மாணவர் கிரண் குமார் ஆலம் ஆகியோர் கடந்த 13 ஆம் தேதி பல்கலைக்கழக குடியிருப்பு வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தக் கொலைக்குக் காரணம் என்று சந்தேகப்படும் 4 கருப்பின இளைஞர்கள் தேடப்பட்டு வருகின்றனர். இதில் 2 பேரின் வரைபடங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.