ஹின்ட்ராஃப் தலைவர்கள் மீது நடவடிக்கை உறுதி: மலேசிய அரசு!
புதன், 19 டிசம்பர் 2007 (12:30 IST)
ஹின்ட்ராஃப் அமைப்பினர் 31 பேரின் மீதான கொலை முயற்சி வழக்குகள் கைவிடப்பட்டதை வைத்து ஹின்ட்ராஃப் தலைவர்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாது என்று கருத முடியாது என்று மலேசிய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்பு இணையமைச்சர் தாடுக் ஜொஹரி பஹாரம், நாட்டின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஊறு விளைவிக்கும் எந்த அமைப்பின் மீதும் கருணை காட்ட முடியாது என்றார்.
"அந்த 31 பேரின் மீது எடுக்கப்பட்ட முடிவுகளை வைத்து நாங்கள் மென்மையான போக்கைக் கையாள்கிறோம் என்று கருத வேண்டாம். நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதில் எந்த சமரசமும் செய்துகொள்ள முடியாது" என்றும் அவர் எச்சரித்தார்.
"இதுபோன்ற அமைப்புகளுக்கு பின்னால் செயல்படுவர்கள், நாடு, சமுதாயம், தங்கள் குடும்பம், தங்களின் சுய வளர்ச்சி போன்றவை பற்றி மிகவும் கவனமாகவும், தீவிரமாகவும் சிந்திக்க வேண்டும். ஒருவேளை கைது செய்யப்பட்டால் அது அவர்களை மட்டுமன்றி அவர்களின் குடும்பத்தையும் கடுமையாகப் பாதிக்கும்" என்றார் ஜொஹரி பஹாரம்.