பாகிஸ்தானில் ஒசாமா மறைந்திருக்க வாய்ப்பு: முஷாரஃப்!
Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2007 (16:45 IST)
உலகை அச்சுறுத்தும் அல் காய்டா இயக்கத்தின் தலைவன் ஒசாமா பின்லேடன், ஆப்கன் எல்லையில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பாகிஸ்தானின் மலைக் கிராமங்களில் மறைந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று அந்நாட்டு அதிபர் பர்வேஷ் முஷாரஃப் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையில் உள்ள குனார் மாவட்டத்தில் பஜார் பகுதியில் ஒசாமா இருக்கக் கூடும் என்று கூறியுள்ளார்.
அமெரிக்கா குறித்து அவர் கூறுகையில், "அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்கு எதிரான கருத்து எதுவும் என்னிடம் இல்லை. அவர் எனக்கு மிகவும் உதவியாக இருப்பார் என்றும் நண்பராகப் பழகுவார் என்றும் நான் நம்புகிறேன். பாகிஸ்தானில் நிலவும் சூழ்நிலை என்ன என்று அவர் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.
மேற்கத்திய ஊடகங்களின் மீது கடுமையான குற்றச்சாற்றுகளை வைத்த முஷாரஃப், "பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுத்துறையின் செயல்பாடுகளை ஊடகங்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இத்தகைய ஊடகங்களின் பங்களிப்பு என்ன என்று எனக்குப் புரியவில்லை" என்றார்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகள் பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த முஷாரஃப், "புதிய நீதிபதிகள் பதவி ஏற்றுக் கொண்டதை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அங்கீகரித்து உள்ளது. புதிய நீதிபதிகள் இருக்கும் போது பழைய நீதிபதிகளை ஏன் மீண்டும் பணியமர்த்த வேண்டும்?" என்று கேட்டார்.