பாக்.-ல் பயங்கரவாத இலக்குகளைத் தாக்குவோம் : அமெரிக்கா!

Webdunia

வியாழன், 13 டிசம்பர் 2007 (13:58 IST)
பாகிஸ்தான் - ஃப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பழங்குடியினர் பகுதிகளில் பயங்கரவாதிகளின் இலக்குகளை தனித்து முடிவெடுத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் கூறியுள்ளார்!

ஃப்கானிஸ்தானிலும், பாகிஸ்தான் உடனான அதன் எல்லைப் பகுதிகளிலும் உள்ள பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்களை தாக்குவது குறித்த அமெரிக்காவின் திட்டத்தை விளக்கிப் பேசிய அமைச்சர் கேட்ஸ், அப்படிப்பட்ட இலக்குகளை வான் வழியில்தான் தாக்குவதற்கு திட்டமிடுவதாகவும், ஆனால் உடனடியாக அப்படிப்பட்ட திட்டம் ஏதுமில்லை என்றும் கூறியுள்ளார்.

எந்த நிலையிலும் பாகிஸ்தான் எல்லைக்குள் அமெரிக்கா உள்ளிட்ட நேச நாட்டுப் படைகளை அனுப்பும் திட்டம் ஏதுமில்லை என்று கூறிய கேட்ஸ், ஆஃப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ராணுவ ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ள அமெரிக்க படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள அல் கய்டா, தாலிபான் இயக்கங்களின் பயற்சி முகாம்களே தங்களது இலக்கு என்றும், அவைகளை அழித்தொழிக்க பாகிஸ்தான் ராணுவம் நடவடிக்கை மேற்கொள்வதையே தாங்கள் விரும்புவதாகவும், அதற்காக அந்த ராணுவத்தின் படைத் திறனை அதிகரிப்பதற்கு அமெரிக்கா உதவும் என்றும் கூறினார்.

அதற்கு மேலும் நடவடிக்கை தேவைப்பட்டால் அப்பொழுது பயங்கரவாத இலக்குகளைக் குறிவைத்து தாக்கும் முடிவை தன்னிச்சையாக அமெரிக்கா மேற்கொள்ளும் என்றும் கேட்ஸ் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்