ஹின்டிராஃப் தலைவருக்கு எதிராக தேச துரோக வழக்கு!

Webdunia

செவ்வாய், 11 டிசம்பர் 2007 (16:22 IST)
மலேசியாவில் இந்தியா வம்சாவழியினருக்கு சம உரிமையும், சம வாய்ப்பும் அளிக்க வேண்டும் என்று கோரி போராடி வரும் மலேசிய இந்தியர் உரிமை முன்னணியின் (ஹின்டிராஃப்) தலைவர் உதயகுமார் மீது தேச துரோக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது!

மலேசிய இந்தியர்களின் நிலை குறித்து பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரெளனுக்கு உதயகுமார் எழுதிய கடிதம் தேசத் துரோகமாகும் என்று கூறி இவ்வழக்கு அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளதாக மலேசிய அரசு செய்தி நிறுவனமான பெர்னாமா கூறியுள்ளது.

அரசின் குற்றச்சாற்றை மறுத்து வழக்கறிஞர் பி. உதயகுமார் சார்பாக எதிர் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தனக்கு பிணைய விடுதலை அளிக்குமாறு உதயகுமார் விடுத்த கோரிக்கையை ஏற்று 50,000 ரிங்கிட் பிணையத்திற்கும், அதே தொகைக்கு ஈடாக மற்றொரு உறுதிப் பத்திரத்தின் அடிப்படையிலும் உதயகுமாருக்கு பிணைய விடுதலை வழங்கப்படுவதாக நீதிபதி சபரய்யா வோத்மான் கூறியுள்ளதாக அச்செய்தி கூறுகிறது.

உதயகுமாருக்கு எதிரான வழக்கு ஜனவரி 7 ஆம் தேதி முதல் விசாரிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார். இவ்வழக்கில் உதயகுமார் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 3 ஆண்டு வரை சிறைத் தண்டனையோ அல்லது 50,000 ரிங்கிட் அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, நவம்பர் 25 ஆம் தேதி பேரணிக்கு அழைப்பு விடுத்து உதயகுமாரும், அவரது சகோதரர் வேதமூர்த்தி, ஹின்டிராஃப் அமைப்பின் மற்றொரு உறுப்பினரான கணபதி ராமும் அறிக்கை வெளியிட்டது தேச விரோதமானது என்று கூறி தொடரப்பட்டு கிளாங் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றத்தில் அந்நாட்டு காவல்துறை மீண்டும் வழக்காக தொடர்ந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்