இலங்கைத் தலைநகர் கொழும்புவில் சிறிலங்க சமூக நலப் பணிகள் துறை அமைச்சர் அலுவலகத்தில் இன்று காலை நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார். 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சிறிலங்க சமூக நலப் பணிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற பெண் ஒருவரை, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் சோதித்தபோது குண்டு வெடிப்பு நடந்ததாகவும், இது தற்கொலைத் தாக்குதல் என்றும் சிறிலங்க காவல்துறை தெரிவித்துள்ளது.
தற்கொலைப் படை தாக்குதலை நடத்திய பெண், ஊனமுற்றவர் என்று குண்டு வெடிப்பில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் ஆளும் கூட்டணி கட்சியான ஈழம் மக்கள் தேசிய கட்சியின் தலைவரும், இலங்கை சமூக நலப்பணித்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா உயிர் தப்பியுள்ளார். இது அவர் மீது நடத்தப்படும் 2வது தாக்குதல் என்று அரசு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து பேசிய டக்ளஸ் தேவானந்தா, கடந்த 2004ஆம் ஆண்டு முதலே தமது உயிருக்கு விடுதலைப்புலிகள் அமைப்பு குறிவைத்து வருவதாக நேரிடையாக குற்றம்சாற்றியுள்ளார்.