எமது சுயநிர்ணய உரிமையை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் : பிரபாகரன் கோரிக்கை!

Webdunia

செவ்வாய், 27 நவம்பர் 2007 (19:58 IST)
Puthinam PhotoPUTHINAM
ஈழத் தமிழர்களை தொடர்ந்து அழித்துவரும் சிங்கள அரசிற்கு ராணுவ, பொருளாதார உதவிகள் வழங்குவதை அடியோடு நிறுத்திவிட்டு, தமது மக்களின் சுய நிர்ணய உரிமையையும், இறையாண்மையையும் அங்கீகரிக்க சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கேட்டுக் கொண்டுள்ளார்!

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 ஆம் தேதியை ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் துறந்த தங்களது இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மாவீரர் தினத்தை விடுதலைப் புலிகள் கடைபிடித்து வருகின்றனர். இன்று அந்நாளையொட்டி வானொலியில் உரையாற்றிய விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தங்களது விடுதலைப் போராட்டம் தொடர்பாக நியாயமான புதிய அணுகுமுறையை சர்வதேச சமூகம் கடைபிடிக்க வேண்டும் என்று ஈழ மக்கள் எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச அரசு ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை முறித்து, தமிழர் தாயகத்தின் புவியியல் ஒருமைப்பாட்டையும், தனித்துவத்தையும் அழித்தொழிக்கும் ராணுவ செயல் திட்டத்தை ஈவிறக்கமின்றி செயல்படுத்தி வருகிறது என்றும், ஆயிரக்கணக்கில் அம்மக்களைக் கொண்று குவித்து பெரும் மனித அவலத்தை நிகழ்த்தி வருவதாகவும் கூறிய பிரபாகரன், இவ்வளவு நடந்தும் உலக நாடுகளின் போக்கும், நடவடிக்கைகளும், அவைகளின் மீது ஈழ மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை தகர்ப்பதாக உள்ளது என்றும், சர்வதேச நாடுகளின் நடுநிலை செயற்பாடு பெரும் கேள்விக்குறியாக எழுந்திருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

அமைதிக்கு எதிரான சிங்கள தேசத்தின் விரோதப் போக்கையையும், போர் வெறியையும் உலக நாடுகள் உறுதியோடு கண்டித்திருந்தால், தமிழ்ச்செல்வன் இன்று உயிரோடு இருந்திருப்பார் என்றும், சமாதானத்திற்கு இப்படியொரு பேரிடி விழுந்திருக்காது என்றும் பிரபாகரன் கூறியுள்ளார்.

"35 ஆண்டுகளாக ஓய்வில்லாமல் வீசும் எமது வீர விடுதலை வரலாற்றில் நாம் என்றும் இல்லாதவாறு தரைப்படை, கடற்படை, வான்படை என முப்படைகளும் ஒன்று சேர பெரும் படையாக எழுந்து, நிமிர்ந்து நிற்கிறோம். நீண்ட கொடிய சமர்களில் களமாடி அனுபவமும், முதிர்ச்சியும் பெற்ற முன்னணிப் படையணிகளோடும், பன்முகத் தாக்குதல்களையும் நிகழ்த்தவல்ல சிறப்புப் படையணிகளோடும், நவீன படை களச் சக்திகளுடனும், பெரும் பேராயுதங்களுடனும், ஆட்பலம், ஆயுத பலம், ஆன்ம பலம் என சகல பலத்துடனும், நவீன ராணுவமாக வளர்ந்து நிற்கிறோம். நீண்டகாலம் பெரும் சமர்களை எதிர்கொண்டு, மூர்கமாக போர் புரிந்து பெற்றெடுத்த பட்டறிவாலும், கற்றறிந்த பாடங்களாலும், புதிய போர் முறைத் திட்டங்களோடும், எதையும் எதிர்கொள்ளத் தயாராக நிற்கிறோம்" என்று பிரபாகரன் கூறியுள்ளார்.

சத்திய லட்சத்திற்காக சாவைச் சந்தித்து சரித்திரமாவதற்கு ஆயிரமாயிரம் வீரர்கள் எமது விடுதலை இயக்கத்தில் அணிவகுத்து நிற்கும் வரை, எமக்கு முன்னால் எழுகின்ற எல்லா தடைகளையும் நாம் உடைத்தெறிந்து போராடுவோம் என்று பிரபாகரன் கூறியுள்ளார்.

‌பிரபாகர‌ன் உரை முழு ‌விவர‌ம்!

வெப்துனியாவைப் படிக்கவும்