மலேசிய இந்தியத் தலைவர்களை விடுவித்தது நீதிமன்றம்!

Webdunia

திங்கள், 26 நவம்பர் 2007 (14:18 IST)
மலேசிய அரசிற்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி அந்நாட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்ட மலேசிய இந்தியர்கள் அமைப்பின் தலைவர்கள் மூவரையும் கிளாங் நீதிமன்றம் விடுதலை செய்தது!

கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் துறைகளில் தங்களுக்கு சம உரிமை அளிக்கப்படவில்லை என்று கூறி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நேற்று 10 ஆயிரத்திற்கும் அதிகமான மலேசிய இந்தியர்கள் (இவர்களில் பெரும்பான்மையினர் தமிழர்கள்) பேரணி நடத்த முயன்றனர். அந்தப் பேரணிக்கு அரசு அனுமதிக்காத காரணத்தால், தடையை மீறி பிரிட்டிஷ் தூதரகத்தை நோக்கி ஊர்வலமாகச் செல்ல முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் தாக்குதல் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை ஏற்பாடு செய்த ஹிண்ட்ராஃப் என்றழைக்கப்படும் மலேசிய இந்து உரிமை நடவடிக்கைக் குழுவின் தலைவர் வாய்தமூர்த்தி எம். மனோகரனையும், மூத்த தலைவர்கள் வி.எஸ். கணபதி ராவ், ஆர். கங்காதரனையும் கைது செய்து, மலேசிய அரசிற்கு எதிராக அவர்கள் மக்களைத் திருப்ப முயற்சித்ததாக குற்றம்சாற்றி வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு இன்று கிளாங் மாகாண அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மலேசிய இந்தியத் தலைவர்கள் அரசிற்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டனர் என்ற அரசு தரப்பின் குற்றச்சாற்றிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி நீதிபதி வாய்தமூர்த்தி மனோகரன் உள்ளிட்ட மூவரையும் விடுதலை செய்தார்.

விடுதலை பெற்று வந்த தலைவர்களை மலேசிய நீதிக் கட்சியின் ஆலோசகர் அன்வர் இப்ராஹிம், நாடாளுமன்ற உறுப்பினர் லிங் யெங் குவாங், கர்பால் சிங் உள்ளிட்ட ஏராளமான ஆதரவாளர்கள் வரவேற்றனர்.

பல்லாயிரக்கணக்கில் கூடி நின்ற ஆதரவாளர்களுடன் நீதிமன்றத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தண்டபாணி கோயிலிற்கு அவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.

மலேசியாவின் மொத்த மக்கட்தொகையான 2.7 கோடியில் 8 விழுக்காடு இந்தியர்களாவர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். மலேசிய அரசியலும், அரசாங்கத்திலும் ஆதிக்கம் செலுத்தும் மலேயர்களாலும், சீனர்களாலும் தங்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் சம வாய்ப்பும், உரிமையும் அளிக்கப்படுவதில்லை என்று கூறி ஹின்ராஃப் அமைப்பு நேற்று பேரணியை நடத்தியது.

தங்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாக மலேயாவிற்கு குடியேற்றம் செய்த பிரிட்டிஷ் அரசாட்சி இப்பிரச்சனையில் தலையிட்டு சம உரிமை பெற்றுத் தரவேண்டும் என்று கோரி பிரிட்டிஷ் தூதரகத்தில் மனு கொடுக்க ஹின்ராஃப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தது. அந்தப் பேரணிக்கு அனுமதி அளிக்காதது மட்டுமின்றி, அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் மலேசிய காவல்துறை தாக்குதல் நடத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்