அணுசக்தி முகமையுடன் இந்தியா பேச்சு துவங்கியது

புதன், 21 நவம்பர் 2007 (15:58 IST)
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சர்வதேச கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படும் நமது நாட்டில் அணு மின் நிலையங்களை கண்காணிப்பது தொடர்பான தனித்த ஒப்பந்தம் உருவாவது குறித்து சர்வதேச அணுசக்தி முகமையுடன் இந்தியா பேச்சுவார்த்தை துவக்கியுள்ளது.

வியன்னாவில் உள்ள சர்வதேச அணுசக்தி முகமையின் அலுவலகத்தில் அவ்வமைப்பின் தலைவர் மொஹம்மது எல். பராடியின் தலைமையிலான குழுவினருடன் இந்திய அணுசக்தி துறையின் தலைவர் அனில் ககோட்கரின் குழு சற்று முன் பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளது.

இந்தியாவிற்கு என்று சிறப்பான கண்காணிப்பு ஒப்பந்தத்தை வரையறை செய்வது தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும், சர்வதேச அணுசக்தி முகமையிடம் பேசப்படும் என்று பேச்சுவார்த்தைக்குச் செல்வதற்கு முன் பிடிஐ செய்தியாளர்களிடம் அனில் ககோட்கர் கூறியுள்ளார்.

இந்தியா - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான 123 ஒப்பந்தத்தின் படி சர்வதேச அணுசக்தி முகமையுடன் இந்த பேச்சுவார்த்தையை இந்தியா நடத்துகிறது. சர்வதேச அணுசக்தி முகமையுடன் செய்யப்படும் தனித்த ஏற்பாட்டிற்குப் பிறகுதான் அணுசக்தி ஒத்துழைப்பு மற்ற நாடுகளிடம் இருந்து அணு தொழில்நுட்பத்தை இந்தியாவால் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்