காற்று மாசுபாடு: சீனாவின் உள்நாட்டு உற்பத்தி 3.8 விழுக்காடு பாதிப்பு!
புதன், 21 நவம்பர் 2007 (15:26 IST)
காற்று மாசுபாட்டால் சீனாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 3.8 விழுக்காடு அளவுக்கு குறைந்துள்ளது. இது பல்வேறு நோய்களுக்கும், உயிரிழப்புக்கும் அடிப்படையாக அமைந்துவிடும் என சீனாவை உலக வங்கி எச்சரித்துள்ளது.
நீர் - காற்று மாசு அடைந்திருப்பதன் மூலம் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில், சீனா ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் (1 பில்லியன் = 100 கோடி) அளவுக்கு இழப்பைச் சந்தித்து வருகிறது. இது அதன் உள்நாட்டு உற்பத்தியில் 5.8 விழுக்காடாகும். நீர் மாசுபாட்டை விட காற்று மாசுபாடு அதிக இழப்பை ஏற்படுத்தும் என்று சீனா-மங்கோலியாவுக்கான உலக வங்கி இயக்குநர் டேவிட் டாலர் கூறியுள்ளார்.
சீனாவின் பெரிய நகரங்களில் காற்று மாசுபாட்டால் மக்களுக்கு நுரையீரல் புற்றுநோய், மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்படுகிறது. இதனால் ஏராளமான தொழிலாளர்களூம், மாணவர்களும் அதிகளவில் விடுப்பு எடுப்பதாகவும் அவர் கூறினார்.
காற்று மாசுபடுதலைத் தடுக்க நகரின் மையப் பகுதியில் உள்ள உற்பத்தி நிலையங்களை புறநகர் பகுதிகளுக்கு மாற்ற வேண்டும். அதேப் போன்று கரி அடுப்புகளை மாற்றி விட்டு திரவ எரிவாயு அடுப்புகளை உபயோகிக்க வேண்டும். அரசு போக்குவரத்து துறையில் அதிக முதலீடு செய்வதுடன் தனியார் கார் போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் டேவிட் டாலர் கூறினார்.