காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து பாகிஸ்தான் நீக்கமா?
திங்கள், 19 நவம்பர் 2007 (18:58 IST)
பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முசாரஃப் கடந்த 3-ம் தேதி கொண்டு வந்த அவசரநிலை சட்டத்தை திரும்ப பெற காமன்வெல்த் நாடுகள் விதித்திருந்த நிபந்தனையையும்,காலக்கெடுவையும் ஏற்க முசாரஃப் மறுத்துவிட்ட நிலையில், கம்பாலாவில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பாகிஸ்தானை நீக்குவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
காமன்வெல்த் மாநாடு தொடங்குவதற்கு முன்னர் இராணுவ தளபதி பொறுப்பில் அதிபர் முசாரஃப் இருந்து விலக மாட்டார் என்பது தெரிய வருகிறது. அதேப் போன்று தேர்தலும் அவசர நிலை ஆட்சியின் கீழ்தான் நடைபெறும் என்ற நிலையில், காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து பாகிஸ்தானை நீக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
ஜிம்பாவே, பிஜி ஆகிய நாடுகளை நீக்கிவிட்டு பாகிஸ்தானை மட்டும் காமன்வெல்த் கூட்டமைப்பில் தொடர அனுமதிப்பது தங்களை ஏமாற்றுவதாக உள்ளது என ஆசிய-பசிபிக் நாடுகள் தெரிவித்துள்ளன. மேலும் நடப்பு மாநாட்டை நடத்துவது ஆப்பிரிக்க நாடான உகண்டா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டின் போது, காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக உள்ள நியூ ஸீலாந்து நாட்டின் டான்-மெக்-கின்னான்க்கு பதிலாக புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான இரகசிய வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது.
பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடணம் மீதான காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பின் அமைச்சரவை நடவடிக்கைக் குழு முடிவைத் தொடர்ந்து இப்பிரச்சனையில் இந்தியா தனது முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.