ஓர் ஆண்டிற்குத் தேர்தல் இல்லை: முஷாரஃப் வழக்கறிஞர்!
Webdunia
செவ்வாய், 6 நவம்பர் 2007 (12:20 IST)
''பாகிஸ்தானில் இன்னும் ஒரு ஆண்டிற்குப் பொதுத்தேர்தல் நடைபெறும் வாய்ப்பில்லை''என்று அரசின் மூத்த வழக்கறிஞர் சையது சரிஃபுதீன் பிர்ஷாதா தெரிவித்துள்ளார்.
இவர் அதிபர் முஷாரஃப்பிற்கு நெருக்கமானவர் என்பதுடன், அதிபர் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும் ஆஜரானவர்.
பாகிஸ்தானில் பிரகடனம் செய்யப்பட்டுள்ள அவசரநிலை விரைவில் நீக்கப்பட்டுவிடும். ஆனால், தற்போதுள்ள அரசின் ஆயுட்காலத்தை ஒரு ஆண்டிற்கு நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிர்ஷாதா கூறியுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டம் இயங்காமல் உள்ள நிலையில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு இருப்பது பற்றி பிர்ஷாதாவிடம் கேட்டதற்குக் கருத்துகூற மறுத்துவிட்டார்.
அதிபர் முஷாரஃப் எடுக்கும் முடிவுகளில் சட்ட ஆலோசனைகளை மட்டுமே நான் வழங்கி வருகிறேன் என்று கூறிய அவர், அரசியலமைப்புச் சட்டப்படி விரிவான விளக்கங்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
முன்னதாக, தற்போதுள்ள அரசவைகள் நவம்பர் 15-இல் கலைக்கப்படும் என்றும் பொதுத்தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அட்டர்னி ஜெனரல் மாலிக் கையூம் தெரிவித்த கருத்திற்கு எதிராக பிர்ஷாதாவின் கருத்து உள்ளது.
திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்திவரும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பெனாசீர் புட்டோ, அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆகியோரின் கோரிக்கை நிறைவேறாது என்பதை இது குறிக்கிறது.
அவசரநிலை பிரகடனம் செய்வதற்கு முன்பே பிர்ஷாதா கராச்சியை விட்டு வெளியேறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.