பாகிஸ்தானில் விரைவில் தேர்தல் நடக்க வேண்டும்: ஜார்ஜ் புஷ் வலியுறுத்தல்!
Webdunia
செவ்வாய், 6 நவம்பர் 2007 (12:06 IST)
''பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் விரைவில் தனது ராணுவப் பதவியைவிட்டு விலகி, பொதுத்தேர்தலை நடத்த வேண்டும்'' என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வலியுறுத்தியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் தனது பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப் அவசரநிலையைப் பிரகடனம் செய்துள்ளார். இதற்கு உலகநாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அதிபர் முஷாரஃப் விரைவில் அவசரநிலையைக் கைவிட்டு ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வலியுறுத்தி உள்ளார்.
வெள்ளை மாளிகையில் துருக்கி பிரதமரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜார்ஜ் புஷ், ''பாகிஸ்தான் அதிபர் விரைவில் தனது ராணுவப் பதவியைவிட்டு விலகி, பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது'' என்றார்.
''எனது யோசனையை அவர் ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன். அமெரிக்காவின் நிலையை தெளிவாகத் தெரிவிப்பதற்காக பாகிஸ்தானின் மற்ற அதிகாரிகளுடனும் நாங்கள் பேசுவோம்.
வன்முறைக் குழுக்கள், தீவிரவாதி இயக்கங்கள் ஆகியவற்றின் அச்சுறுத்தலை முஷாரஃப் உணர்ந்துள்ளார். இந்த அச்சுறுத்தல்களுக்கு எதிராக கடுமையாகப் போராடும் திறனை அவர் பெற்றுள்ளார்.
முஷாரஃப்பைக் கொல்ல முயலும் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் ஆகியோருக்கு எதிராக அவருடன் இணைந்து போராட நாங்கள் விரும்புகிறோம்.
அத்துடன், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் மீதான தாக்குதல்களை பாகிஸ்தான் மண்ணிலிருந்து திட்டமிடும் சக்திகளையும் அழிக்கவேண்டும்'' என்று ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார்.