''பாகிஸ்தானில் ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் நாடாளுமன்றம், மாநில சட்டசபை தேர்தல் நடத்தப்படும்'' என்று தலைமை அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் அவசரநிலை பிரகடனம் செய்ததைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள், முக்கிய எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
பாகிஸ்தானில் பெருகிவரும் தீவிரவாதத்தை ஒடுக்க அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டிருப்பதாக அதிபர் முஷாரப் அறிவித்துள்ளார்.
ராணுவ தளபதியாக இருந்து கொண்டு அதிபர் தேர்தலி்ல் முஷாரப் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என்ற வழக்கில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்குவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக, பாகிஸ்தான் அரசு அவசரநிலை பிரகடனம் செய்தது.
அமெரிக்கா உட்பட பல வெளிநாடுகள் அவசரநிலையை பிறப்பித்ததற்கு அதிர்ச்சி தெரிவித்துள்ளதுடன், விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என்று அதிபர் முஷாரபை நேரடியாகவும், மறைமுகமாகவும் நிர்ப்பந்தத்து வருகின்றன.
இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கும், நான்கு மாநில சட்டமன்றங்களுக்கும் ஜனவரி இரண்டாவது வாரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று அரசு தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) மாலிக் அப்துல் குயாம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,நவம்பர் 15ஆம் தேதியில் நாடாளுமன்றம், நான்கு சட்ட மன்றங்களும் அடுத்த பத்து நாட்களில் கலைக்கப்படும். அதிலிருந்து 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றார்.
பிரதமர் அஜூஸ் கூறுகையில், நாங்கள் தேர்தல் நடப்பதை தடுக்க விரும்பவில்லை. சுதந்திரமான தேர்தலையே விரும்புகின்றோம் என்றார்.