தற்கொலைபடை தாக்குதலில் இருந்து தப்பிய முன்னாள் பிரதமர் பெனாசிருக்கு அனுதாப அலை ஏதும் இல்லை என்றும், அவருக்கு பொதுத் தேர்தலில் வெற்றி கிடைக்காது என்றும் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஊழல் குற்றச்சாற்றில் சிக்கிய பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கடந்த 8 ஆண்டுகளாக வெளிநாடுகளில் இருந்து விட்டு கடந்த 18-ஆம் தேதி பாகிஸ்தான் திரும்பினார்.
அப்போது கராச்சியில் மனித வெடிகுண்டு மூலம் அவரை கொல்ல நடந்த முயற்சியில் 165 பேர் பலியானார்கள். 400 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலால் பெனாசிர் மீது அனுதாப அலை வீசுகிறதா? வருகின்ற பொதுத் தேர்தலில் அவரது கட்சிக்கு வெற்றி கிடைக்குமா? என்பது குறித்து அங்குள்ள நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது.
இந்த கருத்துக்கணிப்பில் 58 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்கள் பெனாசிருக்கு அனுதாப அலை வீசவில்லை, அவரது செல்வாக்கும் அதிகரிக்கவில்லை. அவருக்கு தேர்தலில் வெற்றி கிடைக்க வாய்ப்பு இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
அதிபர் முஷாரப்புடன் பெனாசிர் உடன்பாடு வைத்துக் கொள்வதை 53 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் எதிர்க்கிறார்கள்.
முஷாரப் அதிபர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று 50 விழுக்காட்டினரும், நீடிக்க கூடாது என்று 50 விழுக்காட்டினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அவர் ராணுவ தளபதி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று 35 விழுக்காட்டினர் மட்டுமே விரும்புகிறார்கள் என்பதும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
கராச்சி, ராவல்பிண்டி, இஸ்லாமாபாத், லாகூர் ஆகிய 4 முக்கிய நகரங்களில் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.