அயல்நாட்டு வல்லுநர்கள் விசாரிக்க வேண்டும்: பெனாசீர்!
Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2007 (18:16 IST)
கராச்சியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு நிகழ்வு தொடர்பாக அயல்நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்களைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று முஷாரஃப் அரசிடம் பெனாசீர் புட்டோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பெனாசீர் கராச்சியில் கூறியதாக 'டான்' இதழில் வந்துள்ள செய்தியின் விவரம்:
பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்பு அமைப்புகளில் அல் கய்டா இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் சக்திகள் நுழைந்துள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே கராச்சி குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தும் பாகிஸ்தான் நாட்டு விசாரணை அதிகாரிகளை மாற்ற வேண்டும்.
சர்வதேச அளவில் இயங்கும் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்புகளைச் சேர்ந்த வல்லுநர்களை விசாரணை நடத்த நியமிக்க வேண்டும். அவர்கள் தொழில்நுட்ப ரீதியாக சரியான முறையில் விசாரிப்பார்கள்.
இது தொடர்பாக பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் நான் விவாதித்துள்ளேன். பாகிஸ்தான் அரசும் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
கடந்த 18-ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல் எனது கட்சியின் மீதான தாக்குதல் அல்ல. அது நாட்டின் ஒருமைப்பாடு, ஜனநாயகம் ஆகியவற்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.
கோழைகள்தான் இக்காரியத்தைச் செய்துள்ளனர். அவர்கள் உண்மையிலேயே நாட்டை இருண்ட காலங்களுக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறார்கள்.
நாட்டில் பெரும்பாலானவர்கள் அவர்களை வெறுக்கிறார்கள். எனவே அவர்கள் என்னை அரசியலாகச் சந்திக்க விரும்பவில்லை.
இஸ்லாம் அமைதியின் மதமாகும். அது அப்பாவிகளை, குறிப்பாகப் பெண்களைக் கொலை செய்வதை அனுமதிப்பது இல்லை.
அதிகாரம்பெற்ற ஜனநாயகத்தை விரும்பும் மக்கள், பயங்கரவாதிகள் கூறும் புனிதப் போருக்கு ஆதரவு தரமாட்டார்கள். அவர்களுடன் இணைய மாட்டார்கள்.
மக்களுக்கு உரிய அதிகாரங்கள், ஜனநாயகத்தை வழங்கவும் நடத்திவரும் போராட்டங்களில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்.
பாகிஸ்தானில் வசிக்கும் ஒவ்வொரு குடிமக்களுக்கும் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அடிப்படைத் தேவைகளை வழங்கவும், உரிமைகளைப் பெற்றுத் தரவும் தொடர்ந்து போராட உள்ளேன். இதை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது.
தேர்தலை முன்னிட்டு பிரச்சாரப் பயணம் குறித்து விரைவில் திட்டமிட்டு முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.