8 வானூர்திகளை தாக்கி அழித்துள்ளோம்-விடுதலைப் புலிகள்

Webdunia

திங்கள், 22 அக்டோபர் 2007 (15:41 IST)
அனுராதபுரத்தில் உள்ள சிறிலங்க வான் படைத் தளம் மீது தங்களது படையினர் நடத்திய தாக்குதலில் சிறிலங்க விமானப் படையின் 8 வானூர்திகள் முற்றிலுமாக தகர்க்கப்பட்டு எரித்து அழிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் இயக்கம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், இன்று அதிகாலை 3.20 மணியளவில் 21 பேர் கொண்ட சிறப்புக் கரும்புலி அணியினர், அனுராதபுரம் வான்படைத் தளத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாகவும், நாலறை மணியளவில் விடுதலைப் புலிகளின் வான் படையினர் அத்தளத்தின் மீது குண்டு வீசி தாக்கியதாகவும் கூறியுள்ளார்.

தங்களுடைய தாக்குதலில் அழிக்கப்பட்ட விமானங்களை பட்டியலிட்டு அந்த அறிக்கையில் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

அதன் விவரம் :

பயிற்சி வானூர்தி - 1, எம்.ஐ.24 ரகஹெலிகாப்டர்கள் -2, பி.டி.6 ரக ஹெலிகாப்டர் - 1, பெல் 212 ரக ஹெலிகாப்டர் - 1, வேவு வானூர்தி - 1, சி.டி.எச். 248-1, மற்றொரு விமானம் 1 ஆகியன முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

தற்போது வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலி அணியினர் அனுராதபுரம் வான்படைத் தளத்திற்குள் தீவிர தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளதாகவும், அவர்களுக்கு உதவியாக வான்படையினர் தாக்குதல் நடத்திவிட்டு தளத்திற்கு வெற்றிகரமாக திரும்பியுள்ளதாகவும் புலிகளின் தளபதி கூறினார்.

இதற்கிடையே வவுனியாவில் இருந்து சென்ற சிறிலங்க விமானப் படையின் பெல் ரக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியுள்ளது என்றும் அந்த அறிக்கை உறுதிபடுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்