''தாலிபான், அல் கய்டா பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருவதால், பாகிஸ்தான் உலகிலேயே மிகவும் ஆபத்தான நாடாகியுள்ளது என்றும், பயங்கரவாதிகளுக்கம், தீவிரவாதிகளுக்கும் புகலிடம் அளிக்கும் நாடாகவும் பாகிஸ்தான் உள்ளது'' என்றுஅமெரிக்க பத்திரிகையான "நியூஸ் வீக்' கூறியுள்ளது.
இது குறித்து அப்பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியின் விவரம் வருமாறு:
ஆப்கானிஸ்தான், ஈராக் போலன்றி, அல் கய்டா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் கேட்பதெல்லாம் பாகிஸ்தானில் கிடைக்கிறது. அரசியல் ஸ்திரமின்மை, நம்பிக்கைக்குரிய தீவிரவாத அமைப்புகள், மேற்கத்திய நாடுகள் மீதான கோபம் என பல்வேறு விடயங்கள் அல் கய்டாவிற்குச் சாதகமாக உள்ளது.
பாகிஸ்தானின் பழங்குடி மக்கள் வாழும் எல்லைப்புற பகுதிகளில் பயங்கரவாதிகளின் நடமாட்டமும், அவர்களின் கட்டுப்பாடும் முழுமையாக உள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானில் சில நகரங்களை தங்களுடைய அடித்தளமாக பயங்கரவாதிகள் மாற்றி வருகிறார்கள்.
தாக்குதலில் காயமடையும் பயங்கரவாதிகள், தீவிரவாதிகளுக்கு இங்குள்ள மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்கின்றன.
பாகிஸ்தானில் இருப்பது பாதுகாப்பாக உள்ளது என்று ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் வீரர்களுடன் நடந்த சண்டையில் படுகாயம் அடைந்த தாலிபான் தளபதி அப்துல் மஜாத் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் குளிர்காலத்தின் போது சண்டை நடைபெறுவதில்லை என்பதால் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு சென்று அங்குள்ள மதப் பள்ளிகளில் பயிற்சி பெறுகிறார்கள்.
சிலர் கணிப்பொறி தொழில் நுட்பம், வீடியோ தொழில் நுட்பம் போன்ற விஷயங்களிலும் ஆங்கிலம் பேசுவதற்கும் பயிற்சி பெறுகிறார்கள்.
குறிப்பாக பெஷாவர் தலிபான் தீவிரவாதிகளுக்கும், பிற மத அடிப்படைவாதிகளுக்கும் முக்கிய மையமாக திகழ்கிறது. துப்பாக்கிகளும், வெடிபொருட்களும் பாகிஸ்தானில் தாராளமாக கிடைக்கிறது.
இவ்வாறு அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ தனது தாயகத்திற்கு திரும்பியபோது நடந்த தாக்குதலில் 165க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இத்தகைய பயங்கரவாதிகளின் வன்செயல்கள் பாகிஸ்தானில் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் இச்செய்தி முக்கியத்துவம் பெறுகிறது.