சிறிலங்காவில் 4 லட்சம் மக்கள் இடம்பெயரும் அபாயம்: ஐ.நா கவலை
Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2007 (12:22 IST)
சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் ராணுவம் வலிமையான தாக்குதலை நடத்தினால் 4 லட்சம் மக்கள் இடம்பெயரும் நிலை உருவாகும் என்று ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையில் நடைபெற்றுவரும் மோதல்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலைகுறித்து ஐ.நா. அதிகாரிகள் அறிக்கை தயாரித்துள்ளனர்.
ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனுக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.
குறிப்பாக வடக்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ராணுவம் வலிமையான தாக்குதலை நடத்தினால் 4 லட்சம் மக்கள் இடம்பெயரும் சூழல் உருவாகும்.
சிறிலங்காவில் மனிதாபிமான அடிப்படையில் பணியாற்றும் அமைப்புகளைச் சேர்ந்த பணியாளர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக உள்ளனர் என்று முத்திரை குத்துவதை அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், ஐக்கிய நாடுகள் அவை, அரசு சார்பற்ற நிறுவனங்களின் பணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை சிறிலங்கா அரசு விதிக்கிறது. நிர்வாக அடிப்படையில் பல்வேறு முட்டுக்கட்டைகளை அரசு ஏற்படுத்துகிறது.
இதனால் மனிதாபிமான அடிப்படையில் இயங்கும் பணியாளர்கள் இடையில் ஒருவிதமான அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கு அனுமதி கிடைப்பதில்லை. அயலுயுறவு அமைச்சகம் தொடர்ந்து அனுமதி மறுக்கிறது.
இதுகுறித்து அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் பலமுறை விவாதித்துள்ளோம். இருந்தாலும், அரசின் நிலையில் மாற்றம் வந்ததாகத் தெரியவில்லை.
எனவே, சிறிலங்காவில் மனிதாபிமான அடிப்படையில் இயங்கும் அமைப்புகளுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று சர்வதேச நாடுகள் சிறிலங்கா அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.