ஆள்கடத்தலைத் தடுக்க அமெரிக்கா நிதியுதவி!
Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2007 (16:11 IST)
அதிகரித்துவரும் ஆள்கடத்தல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான பயிற்சியளிக்க சிறிலங்கா அரசிற்கு நிதியுதவி செய்வோம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
''பாலியல் முறைகேடுகள், வீட்டு வேலைகள் போன்றவற்றிற்காக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோர் கடத்தப்படுவது சிறிலங்காவில் அதிகரித்து வருகிறது.
இதைத் தடுப்பதற்காக அரசும், பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் போராடி வருகின்றன. ஆனால் பலநேரங்களில் நிதியில்லாமல் சிக்கல் ஏற்படுகிறது.
எனவே அமெரிக்க அரசும், சர்வதேச மேம்பாட்டிற்கான அமெரிக்க முகமையும் இணைந்து 5,00,000 டாலர் மதிப்புள்ள திட்டத்தை உருவாக்கியுள்ளன. இதில் சிறிலங்கா அரசு அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும்'' என்று அமெரிக்கத் தூதர் ராபர்ட் பிளேக் அறிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இத்திட்டம் புலம் பெயர்ந்தோருக்கான சர்வதேசநிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் என்றார்.
மேலும், கடத்தல்காரர்களைக் கண்டறியவும், கைது செய்யவும் சட்டவல்லுநர்கள், அமலாக்கப்பிரிவு அதிகாரிகளைக் கொண்ட வலுவான அமைப்பு சிறிலங்காவிற்குத் தேவைப்படுகிறது.
இந்தத் திட்டத்தில், 500 சட்ட அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், அரசு அதிகாரிகளுக்கு ஆள்கடத்தலுக்கு எதிராகப் போராடுவதற்குப் பயிற்சி அளிப்பதக்குத் தேவையான நிதி வழங்கப்படும்.
ஆள்கடத்தலைத் தடுப்பதற்கு எதிராகத் தேசியக் கொள்கைகளை உருவாக்க வேண்டும். இதில் இணைந்து செயல்பட ஆர்வமுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அரசுடன் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் பிளேக் தெரிவித்தார்.